மம்தா ஆவேசம், வெளிநடப்பு
புதுடெல்லி, ஜூலை 27–
பிரதமர் மோடி தலைமையில் ‘நிதி ஆயோக்’ கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆனால் இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் 8 முதல்வர்கள் புறக்கணித்து உள்ளனர்.
நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கொள்கைகளை இந்த அமைப்பு வடிவமைக்கிறது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9வது ஆட்சிக்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாரதீய ஜனதா மற்றும் அக்கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் மேற்கு வங்காள முதல்வர் இந்தக் கூட்டத்தில் பாரதீய ஜனதா மற்றும் அக்கட்சி கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட 8 பேர் புறக்கணித்தனர். மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து இந்தக் கூட்டம் ஆலோசனை மேற்கொள்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும், திட்டங்களை வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய மாநாட்டின் போது, ஐந்து முக்கிய தலைப்புகளில் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. குடிநீர், மின்சாரம், ஆரோக்கியம், பள்ளி மற்றும் நிலம்; சொத்து என 5 முக்கிய தலைப்புகளில் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
விக்சித் பாரத் 2047 க்கான 10 துறை சார்ந்த கருப்பொருள் பார்வைகளை ஒருங்கிணைக்கும் பணி நிதி ஆயோக்கிடம் கடந்த ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் நல்ல நிர்வாகம் உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தியாவின் வளர்ச்சி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நிதி ஆயோக் இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி வெளிநடப்பு
நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். முன்னதாக அவர், கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லையெனில் கூட்டத்தை புறக்கணிப்பேன் எனக்கூறியிருந்தார். அதன்படி, இன்று புதுடெல்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் அவர் வெளிநடப்பு செய்தார்.
நிருபர்களிடம் மம்தா பேசுகையில், ‘‘இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் நான் மட்டுமே கலந்து கொண்டேன். ஆனால், கூட்டத்தில் என்னை 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தேன். என்னை பேசுவதற்கு அனுமதி மறுத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது’’என்று ஆவேசமாகக் கூறினார்.
நிதீஷ் பங்கேற்கவில்லை
இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்துகொள்ளாததற்கான சரியான காரணத்தை உடனடியாக வெளியிடவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளாதது இது முதல் முறையல்ல. முன்னதாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொள்ளவில்லை, பிகார் பிரதிநிதியாக அப்போதைய துணை முதல்வர் கலந்துகொண்டார்.