செய்திகள்

டெல்லியில் இடி மின்னலுடன் கனமழை !

Makkal Kural Official

மரம் விழுந்து 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

புதுடெல்லி, மே 2

டெல்லியில் இன்று அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து குடியிருப்பின் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் தாய் என 4 பேர் உயிரிழந்தனர். பலத்த காற்று வீசியதால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது, 40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

டெல்லியில் இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம், குளம்போல தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் மிதந்தபடி, மெதுவாக செல்கின்றன. லாஜ்பத் நகர், ஆர்கே புரம், துவாராகா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. திடீர் மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை, கோடை வெப்பத்தின் தாக்கத்தை நீக்கியுள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை அதிகாலை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருத்தது குறிப்பிடத்தக்கது.

மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என டெல்லி விமான நிலையம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்களும் இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளன.

குறிப்பாக, புழுதி காற்றும் வேகமாக வீசி வருவதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகவும், 40க்கு மேற்பட்ட விமானங்கள் வேறு பகுதிகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன.

துவர்கா பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் அமைந்துள்ள குடியிருப்பின் மீது மரம் சாய்ந்து விழுந்துள்ளது. இதில் 3 குழந்தைகள் மற்றும் தாய் என 4 பேர் உயிரிழந்தனர். கணவர் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும், காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மட்டுமல்லாது சில வட மாநிலங்களிலும் மழை பதிவாகி உள்ளது. மழை குறையும் வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்களை மூடவும், பயணம் செய்வதைத் தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் வடக்கு பகுதி, ஹரியானா, இமாச்சல், ராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கு பகுதி, ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திராவின் வட கடலோர பகுதி மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும் இன்று மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *