புதுடெல்லி, செப். 16–
டெல்லியில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அக்னி பரீட்சையில் இறங்கி, மக்களின் தீர்ப்பை கேட்கப் போவதாகவும், சட்டசபைக்கு தேர்தலை முன்னதாக நடத்தும்படி கோர உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
‘அடுத்த இரண்டு நாட்களுக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்தி, ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். நான் நேர்மையானவன் என்பதற்கு மக்கள் ஒப்புதல் அளித்தால் தான், தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவியில் நானும், துணை முதல்வர் பதவியில் மணீஷ் சிசோடியாவும் அமர்வோம்’ என கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, அடுத்த முதல்வராக ஆம்ஆத்மியின் 2வது பெரிய தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பெயர் அடிப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட கெஜ்ரிவால் வழக்குகளை எதிர்கொள்பவர் பதவியை வகிக்க மாட்டார் என தெரிவித்தார்.
2 பெண்கள் போட்டி
இந்த சூழலில், அடுத்த முதல்வர் போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி அமைச்சரும், கல்வி நிலைக்குழு தலைவருமான அதிஷி, முதல்வர் போட்டியில் முன்னிலையில் உள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, நிர்வாகத்தை சிறப்பாகக் கையாண்டு வந்ததால், இவர் முதல் வரிசையில் உள்ளார்.இவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் கோபால் ராய் உள்ளார். 49 வயதாகும் கோபால் ராய், ஆம் ஆத்மியில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டிருப்பவர், மாணவர் அமைப்பில் பணியாற்றி, அமைச்சராகி, தொழிலாளர் சமுதாயத்தினருடன் நெருங்கிய தொடர்பிருப்பதால் இவரது பெயரும் பேசப்பட்டு வருகிறது.
டெல்லி அரசியல் வட்டாரத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் மிக முக்கிய நபராக விளங்குகிறார். முன்னாள் வருவாய் துறை அதிகாரியான சுனிதா கெஜ்ரிவால், அவரது கணவரைப் போலவே, வருமான வரித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது ஆம் ஆத்மிக்காக மக்களவைத் தேர்தலில் டெல்லி, அரியானா, குஜராத் மாநிலங்களில் சிறப்பாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அவ்வப்போது, கெஜ்ரிவால் எழுதிய கடிதங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும், கெஜ்ரிவாலின் குரலாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவரும் முதல்வர் பதவியில் அமரவைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா இன்று சந்தித்துப் பேசுவார்கள். முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்த பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இது. இந்த சந்திப்பின்போது, டெல்லியின் அடுத்த முதல்வர் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், கைலாஷ் கெலாட் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்றும் ஊகங்கள் வெளியாகி உள்ளன.