செய்திகள்

டெல்டா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி 94% பயன்

ஹமிர்பூர், ஜூலை.19-

டெல்டா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி 94 சதவீதம் பயனுள்ளது என்று இங்கிலாந்து கண்டறிந்துள்ளது.

கொரோனா வைரஸ் மாறுபாடுகளில் டெல்டா வைரஸ் கவலைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. இது மிக அதிவேகமாக பரவுகிறது.

இந்தியாவில் முதன் முதலாக காணப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகின் 110 நாடுகளுக்கு மேலாக பரவி விட்டது. இன்னும் அதிக பரவல், கூடுதலான உயிரிழப்பு ஆபத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எதிர்காலத்தில் இந்த வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

இந்த டெல்டா வைரசுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி, இந்தியாவில் புனே இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி 94 சதவீதம் பயனுள்ளது என இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு கண்டறிந்து அறிவித்துள்ளது.

65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் இந்த தடுப்பூசியின் 2 ‘டோஸ்’ போட்டுக்கொண்டு விட்டால், அவர்களை டெல்டா வைரஸ் தாக்கினாலும் உயிரிழப்புக்கு எதிராக 94 சதவீதம் பாதுகாப்பை கொண்டுள்ளது என்பது முக்கிய அம்சம். இதை இமாசல பிரதேச சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவேண்டும்.

இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் அறியப்பட்ட கவலைக்குரிய கொரோனா வகைகளில் டெல்டா வைரஸ் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை ‘இன்சாகாக்’ அமைப்பு (கொரோனா மாறுபாடுகள் பற்றிய இந்திய அமைப்பு) தரவுகள் காட்டுகின்றன. சமீபத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இது தெரிய வந்துள்ளது.

பொதுமக்கள் கொரோனா கால கட்டுப்பாடுகளை குறிப்பாக கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *