செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் 22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்குங்கள்

Makkal Kural Official

ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை, ஜன.21-–

தொடர் மழை-–பனி மூட்டம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-–2003 ‘காரிப்’ பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராக செயல்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக செப்டம்பர் மாதம் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்தால் டெல்டா விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி 2022-–2023 ‘காரிப்’ சந்தைப் பருவத்திலிருந்து செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

1.9.2024 முதல் 17.1.2025 வரை 1,349 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 80 ஆயிரத்து 634 விவசாயிகளிடம் இருந்து 5 லட்சத்து 72 ஆயிரத்து 464 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,378 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண்களுக்குச் செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், நாளது தேதி வரை மத்திய அரசு அனுமதித்துள்ள 17 சதவீதம் ஈரப்பதத்தில் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியதாலும் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதாலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளது.

22 சதவீத ஈரப்பதம்

மேலும் வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து பனிப்பொழிவுடனும் உள்ளதால் விவசாயிகள் நெல்லை உலரவைக்கச் சிரமப்படுவதால் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17 சதவீதம் ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *