செய்திகள்

டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 7 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி

Spread the love

திருவாரூர், மார்ச் 8

கடைமடை பகுதி வரை தடையில்லாமல் தண்ணீர் சென்றதால், டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 7 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருவாரூரில் விவசாயிகள் சங்கங்கள் நடத்திய பாராட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

விவசாயிகள் உரிய நேரத்தில் வேளாண் பணிகளை மேற்கொண்டு, பயிர் சாகுபடி செய்யவேண்டுமென்பதற்காக, கூட்டுறவு வங்கிகளின் மூலம் வட்டியில்லா பயிர்க்கடன் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரை எங்களுடைய அரசு 48 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கியிருக்கிறது.

டெல்டா பகுதியில் மட்டுமல்ல, பல்வேறு பகுதியில் மானாவரிப் பயிரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் மக்காச்சோளப் பயிரை அமெரிக்கன் படைக்குழு தாக்கி, பெரும் நஷ்டத்திற்குள்ளாகினர். விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடத்திலே வைத்த கோரிக்கையை ஏற்று, மக்காச்சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாணம் அளிக்க வேண்டுமென்பதற்காக அம்மாவினுடைய அரசால் 186.25 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்டது அரசின் கவனத்திற்கு தெரிந்தவுடனே, வேளாண் துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு அரசாங்கமே பூச்சிக் கொல்லி மருந்தை அடித்து, அந்த விவசாயிகளைக் காப்பாற்றிய அரசு எங்களுடைய அரசு. அதற்காக 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தோம். இந்த ஆண்டு மக்காச்சோளம் நல்ல விளைச்சலை விவசாயிகள் பெற்றிருக்கின்றார்கள்.

விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்க வேண்டும். அதற்காக ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா சுமார் 1,866 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1,000 கோடி ரூபாயில் சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் பிரம்மாண்டமான முறையில் நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். அதிலே, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வரவிருக்கிறது.

30 லிட்டர் பால் தரும் மாடு

அந்த ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக நாட்டின காளைகள், நாட்டின மாடுகள் மற்றும் ஆட்டினங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் கலப்பின பசுக்களை உருவாக்கி, நாளொன்றுக்கு 30 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய கறவை பசுக்களை நம்முடைய விவசாயிகளுக்கு அளித்து, அவர்கள் நல்ல லாபத்தை பெறுவதற்காக எங்களுடைய அரசு இன்றைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆடு வளர்ப்பையும் அந்தத் திட்டத்தில் சேர்த்திருக்கின்றோம்.

நாம் வளர்க்கின்ற ஆடு 15 கிலோவிலிருந்து 20 கிலோ வரை எடையுள்ள ஆடாக இருக்கும். அதை கிட்டத்தட்ட 40 கிலோ, 50 கிலோ எடையுள்ள ஆடாக வளரும் இனத்தை உருவாக்கி விவசாயிகளுக்குக் கொடுக்கின்றபொழுது, அந்த ஆட்டை வளர்த்து, அந்த ஆட்டை விற்பனை செய்கின்றபொழுது கூடுதல் வருமானத்தை பெறுவார்கள். இப்படிப்பட்ட அற்புதமான திட்டத்தை உருவாக்கி, விவசாயிகளுடைய வாழ்க்கைத் தரம் உயரவேண்டும், விவசாயிகளுக்கு வருமானம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். விவசாயிகள் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்புத் தொழில். அந்தக் கால்நடை வளர்ப்பை அரசு உரிய முறையிலே மேற்கொண்டு நவீன ஆராய்ச்சியின் மூலமாக விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கின்ற அளவிற்கு உருவாக்கித் தருவோம்.

7 லட்சம் ஏக்கர் கூடுதல் சாகுபடி

டெல்டா பகுதியில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல். கடைமடை பகுதி வரை அனைத்து பகுதிக்கும் தடையில்லாமல் தண்ணீர் சென்றது. அதற்கு அம்மாவினுடைய அரசு சுமார் 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பகுதிகள் தூர்வாரப்பட்ட காரணத்தால், கடைமடை பகுதியில் தண்ணீர் தடையில்லாமல் சென்றதால், இந்த ஆண்டு டெல்டா பகுதிகளில் சுமார் 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல் அனைத்தையும் கொள்முதல் செய்வதற்கு எங்களுடைய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,899 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் மட்டும், 1,485 நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 14 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதில் 12 லட்சம் மெட்ரிக் டன் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, 2.73 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். சுமார், 2,810 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

ஒரு குவின்டால் சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,905 வழங்கப்படுகிறது, இதில் மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.70 ஆகும். ஒரு குவின்டால் சாதாரண ரக நெல்லுக்கு ரூ.1,865 வழங்கப்படுகிறது, இதில் மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.55 ஆகும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *