ஆர்.முத்துக்குமார்
பழையன கழிதலும் புதியன புகுதலும் கால சுழற்சியில் கட்டாயமான ஒன்று. இது நட்சத்திர விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்! கிரிக்கெட்டில் சச்சின், கங்குலி, சேவாக் விளையாடிக் கொண்டிருந்த நாட்களில் அவர்கள் இடத்திற்கு வரும் தகுதி இருந்தும் யாரையும் தேர்வு செய்ய வழியின்றி தான் இருந்தது!
இது அணிகளாக விளையாடப்படும் ஆட்டங்களுக்கான சாபக்கேடு என்று ஒரு கட்டத்தில் தோன்றுவதும் உண்டு. ஆனால் தனியாளாக விளையாடும் விளையாட்டுகளுக்கு இளம்வீரர் வரவால் ஒரு கட்டத்தில் நட்சத்திர வீரரை வீழ்த்தி ஓய்வு பெற வைத்து விடுவதும் வாடிக்கை.
ஆனால் 2002 முதல் டென்னிஸ் உலக ஜாம்பவான்கள் பெடரர், நடால் பின்நாளில் நோவாக் ஜோகோவிச் இவர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே எல்லா வெற்றிகோப்பைகளும் இருந்தது.
சென்ற வாரம் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று டென்னிஸ் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார். முதல்நிலை வீரரான 20 வயதே ஆன ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 2–-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 1-–6, 7–-6, 6–-1, 3–-6, 6–-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் அல்கராஸ். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புல் தரை கிராண்ட் ஸ்லாம் போட்டியில் தொடர்ச்சியாக 34 வெற்றிகளை குவித்த ஜோகோவிச்சின் வெற்றி வேட்டைக்கு தடை போட்டுள்ளார் அல்கராஸ்.
ஸ்பெயினின் ஜாம்பவான் ரபேல் நடால் போன்றே அல்கராஸும் களிமண் தரை ஆடுகளம் மற்றும் கடின தரை ஆடுகளங்களிலேயே தனது முத்திரையை பதித்து வந்தார். இதனால் அல்கராஸை, ஜோகோவிச் எளிதாக வீழ்த்தி 8–-வது முறையாக கோப்பையை கைளில் ஏந்திவிடலாம் என்ற நினைப்புடன் களமிறங்கினார்.
டென்னிஸ் அரங்கில் ஜோகோவிச் 50 முறை ரோஜர் பெடரருக்கு எதிராக விளையாடி உள்ளார். இதில் 17 ஆட்டங்கள் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் மோதியவை. அதேவேளையில் ரபேல் நடாலுக்கு எதிராக 59 முறை மோதி உள்ளார் ஜோகோவிச். இதில் 18 ஆட்டங்கள் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மோதியவை. இவர்களுக்கு ஊடாக இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவுடனும் போராடத் தவறவில்லை ஜோகோவிச். அவருக்கு எதிராக 10 கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்கள் உட்பட 36 முறை மோதினார். இதில் பெடரர் ஓய்வு பெற்றுவிட்டார். ரபேல் நடால் காயம் காரணமாக நீண்டகாலம் விளையாடாமல் உள்ளார். 20 வருடங்களில் டென்னிஸ் உலகை ஆண்ட இரு ஜாம்பவான்களுடன் மல்லுக்கட்டிய ஜோகோவிச், தற்போது 20 வயதான ஸ்பெயின் புயலான அல்கராஸுடன் போராட வேண்டிய நிலையில் உள்ளார்.
வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வந்த நோவாக்கை வீழ்த்திய 20 வயது இளம்புயல் அல்கராஸ் அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் பல வெற்றிகளை பெறுவாரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.