சென்னை, ஆக. 6–
‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும், சுமார் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களை 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நியமனத் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைக்கு, தி.மு.க. அரசு செவி சாய்க்காத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 410 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 2018ம் ஆண்டுக்கு முன்பாக பின்பற்றப்பட்ட ஆசிரியர் நியமன நடைமுறையின் படியே, அப்போது நடைபெற்ற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வழக்கு தொடுத்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, தங்களின் பணிக்காலத்தின், பாதி காலத்தை போராட்டங்களிலேயே கழித்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக பரிசீலனை செய்து பணி நியமன ஆணைகளை வழங்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.