சென்னை, செப்.13-
டெங்கு, தொற்று நோய்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தலைமைச்செயலாளர் பேசியதாவது:-
பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் ஏற்பட்டவுடன் பொதுமக்கள் ஆஸ்பத்திரியை அணுகுமாறும், தாங்களாகவே எந்த மருந்தும் உட்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கு காய்ச்சல் சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி மருத்துவ வல்லுனர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் கண்ட பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்களில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் போது தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், பொதுமக்களும் தங்கள் வீடுகளைச்சுற்றி கொசுக்கள் தேங்கா வண்ணமும், குடிநீர் மாசுபடாமல் இருக்கவும் போதிய ஒத்துழைப்பு வழங்க
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.