சிறுகதை

டூ வீலர் பயணம் – ராஜா செல்லமுத்து

படித்த படிப்பிற்கு வேலை வெட்டி எதுவும் இல்லாததால் சுந்தர் தன் இரு சக்கர வாகனத்தையே பணம் கொழிக்கும் வாகனமாக பயன்படுத்திக் கொண்டிருந்தான்.

அந்த தன் இரு சக்கர வாகனத்தை ஓலா ஊபர் என்ற இரண்டு ஆன்லைன் பயணப் பதிவுகளில் பதிவு செய்திருந்தான்.

கார் ஆட்டோவை விட டூவீலர் கட்டணம் குறைவாக இருப்பதால் ஆண்கள் பெண்கள் என்று நிறைய பேர் கார் ஆட்டோவை விடுத்து டூவீலரில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

இதனால் சுந்தருக்கு முன்னைவிட இப்போது பணத்தட்டுப்பாடு கொஞ்சம் குறைந்திருந்தது. பெட்ரோல் போக தினமும் 2000 வரை அவனுக்கு கையில் பணம் மிச்சம் இருந்தது.

ஆண் வாடிக்கையாளர்களை விட பெண் வாடிக்கையாளர்கள் வந்தால் அவனின் வாய் காதுவரை சென்று திரும்பும். அதுவும் தன் வலது பக்கம் இருக்கும் ஃபுட் ஸ்டிக் பக்கத்தில் ஒரு பெட்டியை வைத்திருந்தான்.

அது பின்னால் அமரும் நபர்களின் கால் சுந்தரின் காலோடு உரசி நின்றது.

ஒரு முறை சுந்தரின் டூவீலரில் ஏறிய ஒரு பயணி அதை வாய் திறந்து கேட்டான்.

ஏன் சார் இப்படி உரசிக்கிட்டு உட்காரது மாதிரி பெட்டி வச்சிருக்கீங்களே ?எவ்வளவு அன் ஈசியா இருக்குன்னு தெரியுமா? ஆம்பளைக்கு ஆம்பள பரவால்ல. யாராவது லேடிஸ் வந்தா என்ன பண்ணுவீங்க ?என்று கேட்க

நான் லேடீஸ் ஏற்றும் போது சொல்லிட்டு தான் ஏத்துவேன். இப்படி இருக்கு கால் உரசதான் செய்யும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உட்காருங்க என்று சொல்லுவேன். அவங்களும் சரின்னு வண்டியில ஏறுவாங்க என்று கொஞ்சம் அதப்பலாகவே பதில் சொன்னான், சுந்தர்.

ஆனால் அவன் சொன்னது உண்மை இல்லை என்று அந்த பயணிக்குப் பட்டது இவன் ஒருநாள் யாரிடமாவது செமத்தியாக வாங்குவான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அந்தப் பயணி அதற்கு மேல் பேசாமல் தன் இருப்பிடம் வந்ததும் இறங்கி சென்று விட்டார் .

வழக்கம் போல காலையில் இருந்து இரவு வரை தன் டூவீலரை ஒட்டி பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தான் சுந்தர் .

ஒரு நாள் வழக்கம் போல் ஒரு பெண் டூவீலரில் புக் செய்ய உடனே அந்த பெண்ணின் இருப்பிடத்திற்கு சென்றான் சுந்தர்

அந்தப் பெண்ணை காலில் இருந்து தலைவரை பார்த்ததும் அவனுக்கு மயக்கமே வந்தது அழகை அச்சில் வார்த்து அப்படியே உருவம் செய்தது போன்ற ஒரு அமைப்பில் இருந்தாள் அந்தப் பெண்.

அங்க லட்சணங்கள் எப்படி இருக்கணுமோ அந்த லட்சணத்திற்கு அவள் இருந்தாள் என்பது சுந்தருக்கு அவளை பார்த்ததும் தெரிந்தது.

அந்த தேவதை தன் பின் இருக்கையில் அமர போகிறாள் பெட்டியின் மீது கால் வைக்க முடியாமல் தன் கால் மீது அவளின் கால் உரசும் என்ற கனவின் மிதப்பிலேயே அவன் எச்சில் எல்லாம் சர்க்கரையாய் இனித்தது.

அந்த அழகி இருசக்கர வாகனத்தில் ஏறியதும்

OTP நம்பரை சொன்னாள். வாயெல்லாம் பல்லாக இழித்த சுந்தர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மேடம் .கால் வைக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும் என்றபோது

பரவாயில்ல அதுக்கு என்ன இப்போ? என்று சொல்லிய அந்தப் பெண் கொஞ்சம் கூட சலனப்படாமல், வெட்கப்படாமல் வருத்தப்படாமல் பெட்டிக்கு அடுத்து தன் காலை வைத்தாள்.

அந்தத் தந்த கால்கள் சுந்தரின் கால்களை உரசியபோது அவன் ஓட்டிக்கொண்டிருந்த டூ வீலர் இப்போது விமானமாக பயணம் செய்து கொண்டிருந்தது.

தார்ச் சாலையில் வரும் வாகனங்களை எல்லாம் அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

இறக்கை கட்டி வானில் பறக்கும் பருந்தை போல தார்சாலையில் பறந்து கொண்டு இருந்தான்

சார் கொஞ்சம் மெதுவா போங்க என்று அந்தப் பெண் சொன்னதும்

ஓகே ஓகே என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு தன் கதாநாயக சாகசத்தை தார்சாலையில் காட்டிக் கொண்டு போனான் .

அந்தப் பெண் குறிப்பிட்ட இருப்பிடம் வந்ததும் அந்த இடத்தில் இறங்காமல்

வீட்டுக்கு போலாம் வாங்க என்று சொன்னாள். எச்சில் உதட்டில் அவள் சொன்ன வார்த்தைகள் சுந்தரின் இதயத்தில் அச்சு போல ஒட்டிக்கொண்டது.

என்னது வீட்டுக்கா ?என்று மனதிற்குள் நுழைத்த சுந்தர்

போலாமே என்று அந்த அழகியின் வீட்டிற்கு வண்டியை திருப்பினான்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் அந்த அழகின் வீடு வந்தது

காபி சாப்பிட்டு போகலாம் என்ற போது

இப்படி ஒரு பயணியை தன் வாழ்வில் சந்தித்ததே இல்லை பயணத்திற்கும் நட்பிற்கும் இடைவெளி அதிகம் .இந்தப் பெண் என்ன உறவுமுறை இருப்பது போல நம்மை அழைத்து காபி எல்லாம் கொடுத்து அனுப்புகிறாளே ? என்று நினைத்துக் கொண்டான் அவைன் எண்ணப் பறவைகள் எங்கெங்கோ சிறகடிக்க, அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தான்

இங்க உட்காருங்க

என்று அழகான ஒரு சோபாவை காட்டினாள்

பொதுக்கென்று சோபாவில் அமர்ந்தான் சுந்தர்.

கொஞ்சம் இருங்க காபி எடுத்துட்டு வரேன்

என்று சொன்ன அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்தாள் உட்கார்ந்து இருந்த சுந்தர் அப்படியே அவளின் வீட்டை நோட்டமிட்டான்.

என்ன இது ?எதுக்கு கூப்பிட்டு இருக்கா. ஒருவேளை அதுக்கா இருக்குமோ ?என்று மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தபோது ,

இரண்டு ஆண்கள் அந்த வீட்டுக்குள் இருந்து வந்தார்கள்நீ தான் ஓலா டூவிலர் ஓட்டுறவனா? என்று கேட்க

ஆமா என்று தலையாட்டினான் சுந்தர் .அதுவரையில் அவனது ஆசை இலைகள் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தது.

அந்த ஆண்கள் கேட்டதும் ஒற்றை இலையாய் உதிர்ந்து காம்பாய் கருகி நின்றது.

அந்தப் பெண் அதற்குள் காபி இல்லாமல் வெறுங்கையை வீசிக்கொண்டு வந்தாள்.

அண்ணா இவன் தான் என்னுடைய பிரண்டு வண்டியில ஏறவும் சில்மிஷம் பண்ணிட்டு வந்தவன். நானும் புக் பண்ணி இவ வண்டியில வரும்போது கால் வைக்கிற இடத்துக்கு பக்கத்துல பெரிய பெட்டியை வச்ச பொம்பளைகளை உரசிட்டு வர்றதே ஒரு குறியா இருக்கிறான். என்னன்னு கேட்டா, அதுல டூல்ஸ் இருக்குங்குறான். என்னன்னு கேளுங்க அண்ணே என்ற போது

ஏண்டா பைக்ல ஏறுற பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்ங்கிற நாகரிகம் இல்லையா? உன்னைய, உன்ன மாதிரி ஆளுகள ரெண்டு போடு போட்டா தான் அடுத்து ஓட்றவன் வண்டிய சரியா ஒட்டுவான்

என்று சுந்தரை புடைத்து வெளியே அனுப்பினார்கள்.

இனிமே நான் வண்டிய ஓட்டலங்க என்று அவன் சொல்லிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது,

அவருடைய இருசக்கர வாகனம் தூள் தூளாக நொறுங்கிக் கிடந்தது.

இத எங்கே போய் சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்? என்று நினைத்த சுந்தர் அழுது கொண்டே நாெறுக்கப்பட்ட தன் சக்கர வாகனத்தை பொறுக்கிக் கொண்டிருந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *