சிறுகதை

டூயல் சிம் | ராஜா செல்லமுத்து

Spread the love

கனிஷ்காவின் போன் எப்போதும் பிஸியாகவே இருப்பதால் விவேக்குக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

‘‘ச்சே.. என்ன பொண்ணு இவ.. எப்பப்பாத்தாலும் யார் கூடவாவது பேசிட்டே தான் இருப்பாளா..? எப்ப போன் பண்ணுனாலும் பிஸி..பிஸி. வருது’’ என்று நொந்து போன விவேக் மறுபடியும் ஒரு முறை முயற்சி செய்தான் .

அப்போதும் போன் பிஸியாகவே இருந்தது.

‘அப்பிடி யார் கிட்ட தான் இவ பேசிட்டு இருக்கா..? ஒரு மணி நேரமா பிஸியாகவே இருக்கு.. பேனல் வெயிட்டிங் ஆப்ஷன் கூட வைக்கிறதில்ல.. கேட்டா வெயிட்ங் வர்ற கால் இன்னாருன்னு தெரிஞ்சா கட் பண்ணிட்டு உள்ள போயி பேச வேண்டியிருக்கும். அதனால தான் நான் கால் வெயிட்டிங் வைக்கிறதில்லன்னு ரொம்ப தெளிவா பேசுவா.. இந்தக் காலத்து பொண்ணுங்க எல்லாம் ரொம்ப ஸ்மார்ட் . நைட்டு படுத்து எழுந்த ஒடனே பெட்டி நிறையா பணம் இருக்கணும்னு நெனக்கிறவங்க.. இப்பிடி திங் பண்ற ஆளுகளுக்கு கண்டிப்பா தெளிவான அறிவு இருக்காது’ என்று விவேக் தனக்குத்தானே பேசிக் கொண்டான்.

மறுபடியும் கனிஷ்காவின் போனுக்கு ட்ரை பண்ண அப்போதும் பிஸி என்றே வந்தது.

‘‘ச்சே.. இனி மறுபடியும் நாம அவளுக்கு கால் பண்ணக்கூடாது . வேணும்னா.. அவளே கூப்பிடட்டும்..’’ என்று கோபத்தில் போனைக்கட் செய்தான் விவேக். போனைக் கட் பண்ணும் போது அவன் முகத்தில் எக்கச்சக்கமான கோபம் நிறைந்திருந்தது. மறுபடியும் கனிஷ்காவின் போனுக்கு அவன் கால் பண்ணவே இல்லை. கனிஷ்காவிற்கு விவேக் போன் செய்து இரண்டு மூன்று மணி நேரம் ஆனது . அப்போதும் கனிஷ்காவிடமிருந்து விவேக்கிற்கு போன் வரவே இல்லை.

‘இன்னொரு தடவை டிரை பண்ணலாமா..? வேண்டாமா..?’ என்று ஒரு பட்டிமன்றமே விவேக் மனதில் நடந்தது.

‘சரி நாமளே.. டயல் பண்ணுவோம்..’ என்ற முடிவோடு கனிஷ்காவுக்கு போன் செய்தான் விவேக்.

‘‘டிரிங்..டிரிங்..’’ என்று அவளின் செல்போன் சிணுங்கியது

‘‘ஹலோ..’’ எதிர்திசையில் பேசிய கனிஷ்காவின் குரல் அவ்வளவு அழகாக விவேக்கின் காதில் விழுந்தது. விவேக் அதற்குப்பதில் சொல்லவில்லை

‘‘ஹலோ..’’ என்று மறுபடியும் அழுத்தம் திருத்தமாய் உச்சரித்தாள் விவேக்கின் கோபம் மூளை வரை போய் முகத்தில் வெறுப்பாய் அதை வெளித்தள்ளியதால் பதில் சொல்லாமலே இருந்தான்.

‘‘ஹலோ..’’ என்று மறுபடியும் உச்சரித்தாள் கனிஷ்கா.

‘‘ம் சொல்லு..’’ என்று கொஞ்சம் கோபம் கலந்து பேசினான் விவேக்.

‘‘ஹலோ.. விவேக் வாட் எ சர்ப்பிரைஸ்.. வொய் ஆர் யூ ஆன்கிரி விவேக்..?’’ அவள் சிணுங்கல் மொழியில் பேசியது விவேக்கிற்கு மேலும் எரிச்சலைத் தந்தது.

‘‘நத்திங்..’’ என்று நாகரீகமாகப் பதில் சொன்னான் விவேக்.

‘‘நோ.. நோ.. ஐ பைண்ட அவுட் யூ ஆர் ஆன்கிரி..’’ என்று அவள் சொன்ன போது

‘‘எஸ் ஐ ஆம் ஆங்கிரி..’’ என்று கத்திப் பேசினான் விவேக்.

‘‘கூல்.. கூல்..’’ என்று எதிர் திசையிலிருந்த கனிஷ்கா விவேக்கை சமாதனப்படுத்தினாள்.

‘‘வொய் ஆர்யு ஆங்கிரின்னு கேட்டியே. அதுக்கு ஒனக்கு காரணம் தெரியுமா..?’’ என்று கொஞ்சம் கடுமையாகவே பேசினான் விவேக்.

‘‘ஐ டோண்ட் நோ ஆஸ்க் மீ ..’’என்று அலட்சியம் மிகுதியாய் பதில் சொன்னாள் கனிஷ்கா.

‘‘ம் மரமண்ட.. நான் ஒனக்கு எப்ப போன் போட்டாலும் பிஸியாகவே இருக்கு..? யார் கூட பேசிட்டு இருந்த..?’’ விவேக் கேட்டது தான் தாமதம்

‘‘ஓ..யூ.. டோண்ட்.. டிரஸ்ட் மீ . ஆம்.. ஐ கரைக்ட் விவேக்..?’’ கனிஷ்காவின் சுதி குறைந்து சராசரிக்கும் சற்று கீழே பதில் சொன்னாள்.

‘‘எஸ்.. ஐ டோண்டு ட்ரஸ்ட் யூ.. யூ ஸீட் மீ.. ஆம் ஐ கரைக்ட் கனிஷ்கா..?’’ என்று எதிர் பதில் சொன்னான் விவேக்.

‘‘ஓ.. இந்தளவுக்கு தான் என்னைய நம்புறீங்களா..?’’ என்று கனிஷ்காவும் கோபமாகக் கேட்க

‘‘ஆமா.. சரி.. நான் நேத்து ஒனக்கு போன் பண்ணுனேனே.. உன்னோட போன் மட்டும் பிஸியா இருந்துச்சே..’’

‘‘நீ எனக்கு கூப்பிடலயே..’’ என்று கனிஷ்காவும் சொன்னாள்.

‘‘இல்லை நீ சும்மா சொல்ற..?’’ என்று விவேக் மழுப்பினான்.

‘‘ஆமா..அது இருக்கட்டும் .. என்னோட போன் மட்டும் பிஸியா இருந்துச்சுன்னு.. என்னையக் கொறை சொல்றயே.. . உன்னோட போன்ல வெயிட்டிங் வந்துச்சு.. ஆனா நீ.. என்னோட நம்பர பாத்திட்டு பேசலியே.. நீ மட்டும் என் கூட பேசாம யார் கூடவாவது பேசிட்டு இருந்தா..?’’ என்று ஒரு பிடிபிடித்தாள் கனிஷ்கா

‘‘ம்.. இல்லையே..’’ என்று கொஞ்சம் பதற்றம் கலந்து பதில் சொன்னான் விவேக்.

‘‘ஆமா.. உண்மை நீ.. திரும்பவும் என் கூட பேசல..’’ என்று விடாப்பிடியாகப் பதில் சொன்ன விவேக்கிற்கு கிடுக்குப்பிடி போட்ட கனிஷ்காவை

‘‘நீ மட்டும் ஏன்.. என் கூட பேசல..’’ என்று விவேக்கும் பதில் சொல்ல இரண்டு பேருக்கும் செல்போனிலேயே வார்த்தை வாக்குவாதப் போர் நடந்து கொண்டிருந்தது.

‘‘உண்மையைச் சொல்லு.. யார் கூட பேசிட்டு இருந்த..?’ கனிஷ்காவைக் கேள்வியாய்க் கேட்டான் விவேக்.

‘‘ம்.. என் பிரண்ட் கூட..’’ பதில் சொன்னாள். கனிஷ்காவை விவேக் விடுவதாக இல்லை.

‘‘ஒன்னோட பிரண்ட் பேரு..?’’ மறுபடியும் கேள்வி கேட்டான்.

‘‘ரேஷ்மி..’’ அதுவும் ஒற்றைச் சொல் பதிலாகவே இருந்தது.

‘‘இல்ல.. நீ பொய் சொல்ற..?’’ என்று மறுபடியும் விவேக் கேள்வி கேட்டாள்.

‘‘ஆமாடா..’’ என்று பதில் சொன்ன கனிஷ்காவை விவேக் நம்பவில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் கோபம் வந்த கனிஷ்கா,

‘‘ஆமா.. என்னோட பாய் பிரண்ட் கோபி கூட தான் பேசிட்டு இருந்தேன். இப்ப நீ என்ன பண்ணப் போற..?’’என்று கோபப் பதிலை கொழுந்துவிட்டு எரிவது போல் பேசினாள் கனிஷ்கா.

‘‘சரி.. என்கிட்ட மட்டும் இவ்வளவு கேள்வி கேட்டியே..? நீ மட்டும் அவ்வளவு நேரம் யார் கூடப்பேசிட்டு இருந்தே..?’’ என்று விவேக்கை கனிஷ்கா கேள்வி கேட்டாள்.

‘‘என்னோட பிரண்ட் சங்கர் கூட பேசிட்டு இருந்தேன்..’’ என்று விவேக் சொல்ல

‘‘ஏண்டா.. பொய் சொல்ற..?உண்மைய சொல்லு யார் கூட பேசிட்டு இருந்தே..?’’ கனிஷ்கா விடாப்பிடியாகக் கேள்வி கேட்க அவளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான் விவேக்.

‘‘உண்மைய சொல்லு யார்.. கூடப் பேசிட்டு இருந்த..?’’ மறுபடியும் மறுபடியும் கனிஷ்கா கேள்வி கேட்க விவேக்கால் பதில் சொல்ல முடியவில்லை.

ஒரு கட்டத்தில்

‘‘ஆமா.. என்னோட கேர்ள் பிரண்ட் தியா கூட தான் பேசிட்டு இருந்தேன்..’’ என்று விவேக் உண்மையைப் போட்டு உடைக்க இரண்டு பேருக்கும் நடுவில் ஒற்றை நூலில் ஊசலாடிக் கொண்டிருந்தது இவர்களின் காதல்.

இரண்டு பேரின் ஸ்மார்ட போனிலும் டூயல் சிம் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *