செய்திகள்

டீசல் செலவை குறைக்க அரசு பஸ்களை கியாஸ் மூலம் இயக்க திட்டம்

சென்னை, விழுப்புரத்தில் சோதனை ஓட்டம்

சென்னை, ஏப்.30-

டீசல் செலவை குறைக்க அரசு பஸ்களை கியாஸ் மூலம் இயக்க திட்டமிட்டு உள்ளதால், சென்னை, விழுப்புரத்தில் விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசலில் 5.7 கி.மீ. தூரம் பஸ்களை இயக்கி சிக்கனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டாலும் 5.68 கிலோ மீட்டர் இதுவரை இயக்கப்படுகிறது.

டீசலுக்கு பதிலாக இயற்கை கியாசை பயன்படுத்தி பஸ்களை இயக்கினால் ‘மைலேஜ்’ கூடுதலாக கிடைக்கும் என்ற ஆய்வின்படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களை இயற்கை கியாசுக்கு மாற்றி இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்தன.

அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் தலா ஒரு பஸ்சை இயற்கை கியாஸ் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் இயற்கை கியாஸ் பயன்பாட்டுக்கு மாற்றப்படும்.

2022–2023ம் ஆண்டு போக்குவரத்து துறையின் ஆண்டு செலவு ரூ.16 ஆயிரத்து 985 கோடியாக இருந்தது. எரிபொருள் செலவு மட்டும் அதில் 28.35 சதவீதம். அதாவது ரூ.5 ஆயிரத்து 194.68 கோடியாகும். 2018–2019ம் நிதியாண்டில் எரிபொருள் செலவு மொத்த செலவுகளில் 15 முதல் 18 சதவீதமாகும். 2022–2023ம் ஆண்டு, மாநிலத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களின் சராசரி தினசரி இழப்பு ரூ.15 கோடியாக இருந்தது.

எரிபொருள் விலை உயர்வு போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது. போக்குவரத்து நிறுவனங்களின் இழப்புகளுக்கு எரிபொருள், பராமரிப்பு, ஊதிய திருத்தங்கள் மற்றும் பிற காரணிகள் தொடர்பான செலவுகள் அதிகரிப்பதே முதன்மையான காரணம்.

2018 ஜனவரியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோது டீசல் விலை லிட்டருக்கு ரூ.63.50 ஆக இருந்தது, இப்போது ரூ.93 ஆக உள்ளது. இருப்பினும், டிக்கெட் கட்டணம் விலை மாறாமல் உள்ளது.

டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை கியாசுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் சோதனை முறையில் இயற்கை கியாஸ் பஸ்களை இயக்க அரசிடம் இருந்து அனுமதி வந்ததும் பரீட்சார்த்த செயல்பாடு தொடங்கும். டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை கியாசுக்கு மாற்றும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.

இயற்கை கியாசுக்கு மாற்றுவதன் மூலம் பயணமும் வசதியாக இருக்கும். இதற்கான சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் அதிக எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் டீசலில் இருந்து இயற்கை கியாசுக்கு மாறறப்படும். டீசலினால் ஏற்படும் காற்று மாசுவைவிட இயற்கை கியாஸ் பயன்படுத்தினால் மிகக்குறைவாகும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *