நியூயார்க், ஜூன் 10–
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்களில் வீழ்த்தி இந்தியா திரீல் வெற்றி பெற்றது.
இந்தியா- – பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்து விடுகிறார்கள். இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே நேரத்தில் இரு நாட்டு ரசிகர்கள் மனத்தில் பதட்டமும் குறையாது. அந்த அளவுக்கு இந்த இரு அணிகளின் ஆட்டம் விளையாட்டை தாண்டி ஒரு போராட்டம் போல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும்.
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சுமாரான துவக்கத்தையே கொடுத்தனர். விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ரோகித் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய அக்சர் படேல் 20 ரன்களை சேர்த்தார்.
இவர்களுடன் களமிறங்கிய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே குறைந்த ரன்களில் வெளியேற ஜடேஜா, பும்ரா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் கடைசியாக விளையா 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா. பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரௌஃப் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், ஷாஹீன் ஷா அப்ரிடி 1 விக்கெட் வீழ்த்தினர்.
120 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர், ரிஸ்வான் களம் இறங்கினர். பும்ரா வீசிய ஓவரில் 13 ரன்களில் பாபார் அசாம் அவுட்டானார். இதன்பின் முகமது ரிஸ்வானுடன் உஸ்மான் கான் கூட்டணி அமைத்தார். இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர். விக்கெட்டை பறிகொடுத்துவிட கூடாது என்ற கவனத்துடன் விளையாடியதால், பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் 57 ரன்கள் சேர்த்திருந்தது.
அக்சர் படேல்
பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, அக்சர் படேல் கையில் பந்தை கொடுத்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே உஸ்மான் கான் 13 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து வந்த ஃபகர் ஜமான் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து பும்ரா அட்டாக்கில் வந்து வீசிய முதல் பந்திலேயே ரிஸ்வான் ஸ்டம்புகள் சிதற போல்டாகி வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் அக்சர் படேல் வீசிய 16வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட, பாகிஸ்தான் அணி வீரர்களை பதற்றம் தொற்றிக் கொண்டது. இதனால் அடுத்த ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவை அட்டாக் செய்ய முயன்று ஷதாப் கான் 4 ரன்களில் வெளியேறினார்.
கடைசி ஓவரில்
திரீல் வெற்றி
இந்த நிலையில் பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டம் பரப்பானது. சிராஜ் வீசிய 18வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட, பும்ரா வீசிய 19வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இஃப்திகார் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டம் திரீலானது. அந்த ஓவரை வீசுவதற்கு அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே இமாத் வாசிம் ஆட்டமிழக்க, 3 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, கடைசி 2 பந்தில் 2 சிக்சர்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. நசீம் (10) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட் சாய்த்தார்.
பாகிஸ்தானின் தொடர் தோல்வி
இந்த உலக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஏற்கனவே அமெரிக்காவிடம் வீழ்ந்து அதிர்ச்சியில் இருந்தது. தற்போது இந்தியாவிடம் 2வது போட்டியில் தோல்வி அடைந்ததால், அந்த அணி அடுத்த சுற்றுக்கு சொல்வது மிகவும் கடினமாக உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 2021ம் ஆண்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.