செய்திகள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து அணி அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது

அரையிறுத்திக்குள் இந்தியா நுழைந்தது

அடிலெய்டு, நவ. 6–

நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுத்திப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

8-வது டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப்1-ல் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இந்த நிலையில் குரூப்2-ல் இருந்து அரைஇறுதிக்குள் நுழையும் இரண்டு அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் இறுதி கட்ட 3 லீக் ஆட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரைஇறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கும் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடவ்ட் ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு மிகச்சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 58 ரன்னில் பிரிந்தனர். மைபர்க் 37 ரன்னில் கேட்ச் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய டாம் கூப்பர் அதொரையாக ஆடி 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதற்கிடையில் ஓடவ்ட் 29 ரன்னில் கேட்ச் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அக்கேர்மென் 41 ரன்னும், டாம் கூப்பர் 35 ரன்னும் எடுத்தனர்.

159 ரன் இலக்கு

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் அரையிறுதிக்கும் செல்லலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், பவுமா ஆகியோர் களம் புகுந்தனர். இதில் டிகாக் 13 ரன்னுக்கும், பவுமா 20 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த ரோசவ் 25 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி ரன்கள் எடுத்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர். அந்த அணியில் மார்க்ரம் 17 ரன்னுக்கும், அதிரடி ஆட்டக்காரர் மில்லர் 17 ரன்னுக்கும், பார்னெல் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 113 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை தடுமாறியது.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் கிளாசென் மற்றும் மக்ராஜ் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் 18 வது ஓவரை வீசிய டி லீட் க்ளாசெனின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்கா

வெளியேறியது

அப்போது 19 வது ஓவரில் 10 ரன்களை எடுத்தனர். கடைசில் 6 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை ஏற்பட்டது. கடைசி வீசிய டீ லீட்டின் முதல் பந்தில் மகராஜூக்கு கேட்ச் வாய்ப்பு தவற விடப்பட்டது. இதையடுத்து 2 வது வைடாக வீசிய அவர், மறுபடியும் வீசிய 2வது பந்தை நோ பாலாக வீசினார். இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பை உடைத்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் க்ளெவர் 3 விக்கெட்டும், க்ளாசென், டீ லீட் தலா 2 விக்கெட்டும், மீக்கெரன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் தென் ஆப்பிரிகாவின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டது. மேலும் அடுத்து நடைபெறும் பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அரையிறுத்திக்கு

இந்தியா தகுதி

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இறுதிப்போட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அது இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *