செய்திகள்

டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்

சென்னை, மே 15–
டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரியிடம் அண்ணா தி.மு.க. வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அண்ணா தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆர்.எம்.பாபு முருகவேல் மற்றும் ஆர்.பி.பாபு, சி.திருமாறன், என்.சுப்ரமணி, டி.பரணிதரன், வி.முரளிகிருஷ்ணன் ஆகியோர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
சூலூரில் டி.டி.வி.தினகரன் அவருடைய அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பேசுகின்றபோது தேர்தல் விதிகளுக்கு மாறாகவும், தேர்தல் ஆணையம் விடுத்துள்ள வழிமுறைகளுக்கு எதிராகவும் தமிழக முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் தனி நபர் தாக்குதலும், விமர்சனமும் செய்து, ஒருமையில் பேசி தனது வேட்பாளருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும் நீதிமன்றங்களை விமர்சிக்கின்ற விதமாக உச்சநீதி மன்றமும், உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்து முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை காவேரி மேலாண்மை வாரிய வழக்கு, சென்னை – சேலம் 8 வழிச்சாலை வழக்குகளை விமர்சிக்கின்ற விதமாகவும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கின்ற விதமாகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தன்னுடைய வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பதாக கருதி நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சனம் செய்து பேசியுள்ளார். இது முழுவதுமான தேர்தல் நடத்தை விதிமீறல் மட்டும் அல்லாது, நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படும்.
பொய் செய்தி பரப்புகிறார்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தற்போது நீதிமன்ற காவலில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் செயலை நியாயப்படுத்தும் விதமாகவும், உச்சநீதிமன்றம் தவறான தண்டனையை சசிகலாவிற்கு வழங்கி விட்டது என்பதை போலவும், ஒரு பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்புகின்றார். இது இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் 13.5.2019 அன்று மாலை சூலூர் பிரதான சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற மருத்துவ அவசர ஊர்திக்கு வழி விடாமலும், அதில் உயிருக்கு போராடிக் கொண்டு செல்லும் நோயாளியை கொச்சைப்படுத்தும் விதமாகவும் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டே அதில் ஆள் இருக்கிறார்களா என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதோடு மட்டுமல்லாது சிறிது நேரத்தில் வந்த மற்றொரு அவசர கால ஊர்திக்கு வழி கொடுக்காமல் அந்த வாகனம் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
முக்கிய சாலைகளில் செல்ல
அனுமதிக்கக் கூடாது
அவசர கால ஊர்திக்கு அவசரமாக வழி தர வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் அந்த நோயாளியை கொச்சைப்படுத்தும் விதமாக ‘வண்டியில் ஆள் இருக்காங்களா பாருங்க’ என பேசும் டி.டி.வி.தினகரனின் பிரச்சாரத்திற்கு முக்கிய சாலைகளில் உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
எனவே தனிநபர் விமர்சனத்தில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டும், முதல்வர், துணை முதல்வரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும், நீதிமன்ற தீர்ப்புகளை தொடர்ந்து விமர்சனம் செய்தும் ஊர்திகளுக்கு வழிவிடாமல் நோயாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும், தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுத்து அவர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *