சென்னை, பிப்.1-–
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன் திட்டத்தில் இலவச திறன் பயிற்சி கொடுத்து பணி உத்தரவாதம் வழங்குகிறது.
இதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ‘டி.என்.ஸ்கில்’ (TNSkill) (தமிழ்நாடு திறன்) என்ற ஒரு புதிய அப்ளிகேசனை (செயலி) அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனை செல்போனில் ‘பிளேஸ்டோரில்’ சென்று பதிவிறக்கம் செய்யலாம். இதை பதிவிறக்கம் செய்த பின்னர் பயனர் தங்களது சுய விவரங்களை கொடுத்து உள்ளே நுழைய வேண்டும். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதில் பல்வேறு வகையான துறைகளை தேர்ந்தெடுக்கும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. எந்த மாவட்டத்தில் திறன் பயிற்சி தேவை? என்பதையும் பயனர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
‘டி.என்.ஸ்கில்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.