செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு

Makkal Kural Official

சென்னை, ஏப்.25-–

குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தேர்வுத் தேதியையும், தேர்வுத் திட்ட நடைமுறையையும் மாற்றி புதிய அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணையில் குறிப்பிட்டிருந்த குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு, காலிப்பணியிடங்கள், தேர்வுத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை மாற்றி அமைத்திருக்கிறது.

அதன்படி, குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2 ஆயிரத்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு முந்தைய அட்டவணையில் ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டு இருக்கிறது. குரூப்-2 பதவிகளுக்கு இதுவரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இனி குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

தமிழ் தகுதித்தாள் தேர்வு மற்றும் பொதுப் பாடங்களுக்கான விரித்துரைக்கும் (டெஸ்கிரிப்டிவ்) முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செயப்பட உள்ளனர்.

இதேபோல், குரூப்-2ஏ பதவி களுக்கான முதன்மைத் தேர்வுக்கான திட்டத்தையும் திருத்தியுள்ளது. அதன்படி, விரித்துரைக்கும் முறையில் தமிழ் தகுதித்தாள் தேர்வும், பொதுப்பாடங்கள், பகுத்தறிவு மற்றும் பொது நுண்ணறிவு, மொழிப்பாடங்கள் ஆகியவை ‘ஆப்ஜெக்டிவ்’ முறையில் தேர்வும் நடத்தப்பட உள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த புதிய நடைமுறைக்கு தேர்வர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே குரூப்-1 பதவிகளுக்கு 65 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது புதிய அட்டவணையில் 90 இடங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. 6,244 குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதுதவிர மேலும் சில பதவிகளுக்கான பணியிடங்களும், அதற்கான தேர்வு தேதிகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அட்டவணையை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *