2 மாதத்தில் முடிவுகள் வெளியீடு
சென்னை, ஜூன் 15–
சப்–கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 72 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் –1 தேர்வை 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் இன்று எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்–கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 70 காலியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வும், குரூப்-1ஏ பதவியில் (உதவி வனப் பாதுகாவலர்) பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதாவது குரூப் 1 தேர்விற்கு 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தேர்வுக்காக 6,465 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
குரூப் 1 தேர்வு – முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்கள் கொண்டு நடைபெறும். இதில் முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே, இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள்.
இந்த நிலையில், குரூப்–1 மற்றும் குரூப்–1ஏ முதல்நிலை போட்டித்தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும், கூடுதலாக 6 தாலுகாக்களிலும் என மொத்தம் 44 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்வை 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் எழுதினார்கள். சென்னையில் மட்டும் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வை எழுதினார்கள்.
தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சென்னை பிரசிடென்சி பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெறும் வரும் குரூப்–1 தேர்வுக்கான முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்றும், டிஎன்பிஎஸ்சியின் மூலம் இந்த ஆண்டு 12,236 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.