Uncategorized

டிவி நடிகை தற்கொலை வழக்கில் நடிகருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் ரத்து

சென்னை, செப்.6-

டி.வி. நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டிவி நடிகர் தேவானந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டி.வி. நடிகரான தேவானந்த்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் வைஷ்ணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது பெற்றோர்கள், அண்ணாநகர் போலீசில் தேவானந்த் மீது புகார் செய்தனர். அதில் தன் மகளை 2-வது தாரமாக திருமணம் செய்ய தேவானந்த் வற்புறுத்தியதாகவும், இல்லையென்றால் யாருடனும் வாழ விட மாட்டேன் என்று மிரட்டியதால், வைஷ்ணவி தற்கொலை செய்துக் கொண்டதாகவும் கூறியிருந்தனர்.

இதையடுத்து தேவானந்த் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டது. இது சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 2011-ம் ஆண்டு தேவானந்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தேவானந்த் மேல்முறையீடு செய்தார். வழக்கை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் குமரேசன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. அதனால், கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *