செய்திகள்

டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி!

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 26–

குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றி வைத்தார்.

நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் காலை 10.30 மணி அளவில் குடியரசு தினவிழா தொடங்கியது. இதற்காக கடமைப் பாதைக்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரை, பிரதமர்மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

21 குண்டுகள் முழங்க

21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றினார். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்தினர். அப்போது, 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

டிஜிட்டல் பார்வையாளர் புத்தகத்தில் குறிப்புகளை பிரதமர் மோடி பதிவு செய்தார்.

முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இந்தோனேசியாவை சேர்ந்த 382 பேர் கொண்ட குழுவினர் அணி வகுப்பில் பங்கேற்றனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை உள்பட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகள் குழுக்களாக அணிவகுத்து வந்து குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் ராணுவ வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு நவீன ரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் அதி நவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை ஏந்திய வாகனங்கள், பீரங்கிகள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களும் ஊர்வலத்தில் பங்கேற்றன.

அலங்கார வாகனங்களின்

அணிவகுப்பு

இதையடுத்து, பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடனங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. இசைக்கருவிகள் முழங்கிய படி 300 கலைஞர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

பிரளய் ஏவுகணை

பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை, சஞ்சய் போர்க்கள கண்காணிப்பு அமைப்பு, பிரளய் ஏவுகணை, டி90 பீஷ்மா டாங்குகள், படைவீரர்களை அழைத்து செல்லும் சரத் வாகனங்கள், நாக் ஏவுகணைகள், ஐராவத் தாக்குதல் வாகனம் ஆகியவை இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. இதில் பிரளய் ஏவுகணை மற்றும் சஞ்சய் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “குடியரசு தின நல்வாழ்த்துகள். இன்று, நமது குடியரசின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். தொலைநோக்கு பார்வையுடன் நமது அரசியலமைப்பை வடிவமைத்த அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துகிறோம். நமது பயணம் ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் அமைவதை உறுதிசெய்வோம். இந்த லட்சியங்களைப் பாதுகாப்பதிலும், வலுவான, வளமான இந்தியாவை கட்டமைக்க உழைப்பதிலும் நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க இந்த சந்தர்ப்பம் நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *