செய்திகள்

டிரோன் கேமரா மூலம் படம் எடுத்து துல்லியமாக திட்ட வரைபடம் வெளியிடும் பணி:

சிவகங்கை, பிப். 17–

டிரோன் கேமரா மூலம் துல்லியமாக படம் எடுத்து வரைபடம் வெளியிடும் பணியை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் துவக்கினார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று டவுன் பிளானிங் திட்டத்துறையின் மூலம் உள்ளுர் திட்டக்குழுமம் திட்டத்தின் கீழ் ட்ரோன் கேமரா மூலம் மாவட்டத்தில் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுத்து வரைபடம் தயாரிப்பதற்கான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையேற்று ட்ரோன் கேமரா செயல்பாட்டின் பணியினை துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது :–

சிவகங்கை மாவட்டத்தில் டவுன் பிளானிங் துறையின் மூலம் உள்ளுர் திட்டக்குழுமத்தின் மூலம் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுத்து வரைபடம் தயாரித்து அதன்மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் இங்கு தமிழகத்தில் முதல்முறையாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று சிவகங்கை நகர்ப்பகுதியில் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் புகைப்படம் அளவை செய்து அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா விமானம் தரைப்பகுதியிலிருந்து 120 மீட்டர் ஆகாயத்தில் பறந்து படம் எடுக்கும் பணியை மேற்கொள்ளும். இத்திட்டமானது மத்திய, மாநில அரசின் அனுமதியுடன் மாவட்டத்தில் நிலப்பரப்பிலுள்ள அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஆலயங்கள், முக்கியச்சாலைகள், உயர்மட்ட மின் கோபுரங்கள் உள்ள இடங்கள், நீர்நிலைப்பகுதிகள், பொதுமக்கள் குடியிருப்புப்பகுதிகள் மற்றும் குடியிருப்புக்களுக்கு ஏற்றப்பகுதிகள் என துல்லியமாக கண்டறிந்து புகைப்படம் எடுத்து அனுப்புவதன் மூலம் அதனடிப்படையில் கணினி வாயிலாக வரைபடம் தயாரித்து வௌியிடும் போது இத்திட்டம் பொதுமக்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.

காரணம் பொதுமக்களுக்கு தேவையான வசிப்பிடங்கள் ஏரியா குறித்து தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். குறிப்பாக டவுன் பிளானிங் துறையின் மூலம் தயாரித்து வெளியிடப்படும் வரைபடம் மிகத்துல்லியமாக இருப்பதால் மக்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பில்லாத வகையில் தங்களுக்கு குடியிருப்புகளுக்கு தேவையான இடங்கள் கண்டறிவதில் இந்த வரைபடம் மிகப்பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமன்றி இத்திட்டம் பொதுமக்களுக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் முக்கியத்துவம் நிலத்தடிப்பகுதியில் எங்கெங்கு நீர்மட்டம் எவ்வளவு என்பதை கண்டறியும் அளவிற்கு இந்த வரைபடம் உள்ளதால் விவசாயப்பகுதிகளில் இத்திட்டம் விவசாயிகளுக்கு ஏதுவாகவும், குடியிருப்புப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பொதுமக்களின் குடிநீர் தேவையை கண்டறிவதற்கும் ஏதுவாக இருக்கும்.

மேலும், மாவட்டத்தில் முக்கிய சாலைகள், நீர்நிலை ஆதாரங்கள், உயர்மட்ட மின்கோபுரங்கள் குறித்து தௌிவாக தெரிந்து கொள்ளவும், எந்தெந்த பகுதி குடியிருப்புக்களுக்கு ஏற்றப்பகுதிகள் என தெரிந்து கொள்வதன் மூலம் இத்திட்டம் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் சென்னையில் மற்றொரு பணிக்காக இத்திட்டம் துவக்கப்பட்டு செயல்பட்டது. அடுத்தபடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிவகங்கை மாவட்டத்தில் ட்ரோன் கேமரா மூலம் நிலப்பரப்பை துல்லியமாக கணக்கிட்டு வரைபடம் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இன்று முதல் 2 மாதகாலத்திற்குள் மாவட்டத்தில் இப்பணி மேற்கொண்டு முடிக்கும் வகையில் துவக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை நகர் மற்றும் திருப்புவனம் பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு பின்னர் காரைக்குடி பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தயாரிக்கப்படும் துல்லியமான மாவட்ட அளவிலான வரைபடம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொதுமக்களுக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்கும் மிகப்பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டவுன் பிளானிங் துணை இயக்குநர் நாகராஜன், திட்ட இயக்குநர் (உள்ளுர் திட்டக்குழுமம்) மணிகண்டன், மேற்பார்வை கண்காணிப்பு அலுவலர் அண்ணாமலை, வரைபட உதவி மேலாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *