செய்திகள்

‘‘டிரினிட்டி மிரர் 12ம் ஆண்டு கலை விழா’’ கோலாகல ஆரம்பம்

உலகில் எத்தனை இடையூறுகள், இன்னல்கள் தலை தூக்கினாலும் ‘‘பாட்டும் – பரதமும் மக்களோடு இரண்டற கலந்தே இருக்கும்’’: மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன் பேச்சு

சென்னை, நவ.24–

‘‘உலகில் எத்தனை இடையூறுகள் – இன்னல்கள் – நெருக்கடிகள் ஏற்பட்டாலும்… தலைதூக்கினாலும், பாட்டும் – பரதமும் மக்களோடு இரண்டறக் கலந்தே இருக்கும்’’ என்று மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன் நம்பிக்கை வெளியிட்டார்.

டிரினிட்டி ஆர்ட் ஃபெஸ்டிவெல் 2022 கலை விழாவைத் துவக்கி வைத்துப் பேசுகையில், அவர் இவ்வாறு கூறினார்.

‘மக்கள்குரல் – டிரினிட்டி மிரர்’ பத்திரிகைகள் இணைந்து நடத்தும் 12வது ஆண்டு இசை மற்றும் நாட்டிய விழா (டிரினிட்டி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா – 2022) மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி கலையரங்கில் நேற்று (புதன்) கோலாகலமாகத் துவங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் விழா நடைபெறுகிறது.

விழாவை மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன் துவக்கி வைத்தார். கவர்னரும், சிறப்பு விருந்தினர்களும் குத்துவினக்கேற்றினார்கள். மேலும் ஆசிரியர் ஆர்.முத்துகுமாரின் தந்தை எம்.ராஜமாணிக்கத்தின் உருவப்படத்தையும், முரளிராகவனின் தந்தை கே.வி.ராகவனின் உருவப்படத்தையும் கவர்னர் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

தலைவர் ‘மக்கள்குரல் – டிரினிட்டி மிரர்’ஆசிரியர் ஆர்.முத்துகுமார் (தலைவர்), முரளி ராகவன் (அமைப்பாளர்) இருவரும் இணைந்து நடத்தும் கலைவிழா இது. எம்.ராஜமாணிக்கம், கே.வி.ராகவன் ஆகிய இருவரின் நினைவாக இந்த 12வது ஆண்டு இசைக்கலை விழா நடைபெறுகிறது.

நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு மங்கள இசையுடன் விழா கோலாகலமாகத் துவங்கியது. தொடர்ந்து வயலின் – ஸ்ரியன் ஆர்.குந்துர்த்தி (அமெரிக்கா), மிருதங்கம் – பிரஹலாத் வராகசாமி, கடம் – எஸ். கிருஷ்ணா இசை நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு கவிதா திருமலையின் (அமெரிக்கா) மங்கள நாட்டியமும் நடந்தது.

‘இந்து’ குழுமத்தின் தலைவர் (கஸ்தூரி அண்ட் சன்ஸ்) என்.ரவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும், பாராட்டிதிழையும் எம்.கே. நாராயணன் வழங்கி வாழ்த்தினார்.

இதே போல பிரபல நாட்டிய மேதையும், 50 ஆண்டுகளுக்கு மேல் கலைச்சேவையாற்றி வரும் குரு – ராதாவுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி வாழ்த்தினார்.

12 ஆண்டுகளுக்கு முன்: மலரும் நினைவுகள்

‘‘12 ஆண்டுகளுக்கு முன்னால் டிரினிட்டி ஆர்ட்ஸ் பெஸ்டிவெலை அடையாறு குமாரராணி மீனா முத்தையா கல்லூரி அரங்கில் நான் துவக்கி வைத்தேன். இன்று மீண்டும் இந்நிறுவனத்தின் கலை விழாவைத் துவக்கி வைக்கிறேன். அதேபோல அன்று பிரபல நாட்டியக் கலைஞர் அலர்மேல் வள்ளிக்கு பரதக்கலா ரத்னா – சாதனையாளர் விருதை வழங்கினேன். இன்று அதே அலர்மேல் வள்ளி, விருதுபெறும் சகக் கலைஞர்களை வாழ்த்துரைக்க இங்கே வந்திருக்கிறார். என்னோடு மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பது எனக்கு பாக்கியம் தான்’’ என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

‘‘டிரினிட்டி மிரர் போன்று கலை வளர்க்கும் நிறுவனங்கள் – முத்துகுமார் – முரளிராகவன் போன்ற கலை வளர்க்கும் உள்ளங்கள், திரண்டிருக்கும் கலா ரசிகர்கள் இருக்கும் வரை கலைகள் வீழ்ந்து விடாது. காலாகாலத்துக்கும் வேரூன்றி நிற்கும்’’ என்றும் குறிப்பிட்டார்.

வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் ‘இந்து’ குழுமத்தின் தலைவர் என்.முரளிக்கும் தனக்கும் இருக்கும் நெருங்கிய நட்புறவை குறிப்பிட்டவர், தன் தலைமையில் இயங்கிய தேசீய பாதுகாப்பு குழுமத்தின் உறுப்பினராக இருந்து பயனுள்ள யோசனைகளை வெளியிட்ட முரளியின் பங்களிப்பை பற்றியும், அரை நூற்றாண்டுக்கு மேலான பத்திரிகைத் துறை அனுபவத்தில் அவரின், ‘நடுநிலை, பங்களிப்பு, துணிச்சலான உணர்வு வெளிப்பாட்டில் எழுத்துக்கள், ஆளுமை பற்றிக் குறிப்பிட்டவர், அதே பத்திரிகைத் துறையில் முன்னணியில் இருக்கும் ஆர்.முத்துகுமார் தலைமையிலான டிரினிட்டி மிரர் நடத்தும் கலை விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சியும், பெருமிதத்துக்கும் உரியது என்று குறிப்பிட்டு வாழ்த்தினார்.

இருவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் முத்துகுமாரும், முரளிராகவனும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார்கள்.

இசைப் பேரரசி விருதை டாக்டர் எஸ்.சவும்யாவுக்கு (தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்) எம்.கே.நாராயணன் வழங்கினார்.

இசை அரசர் விருதை கே.எஸ்.விஷ்ணு தேவ், இசை அரசி விருதை மாளவிகா சந்தர், நட ரத்னா விருதை டாக்டர் ஹரிணி ஸ்ரீவத்சா, லய ரத்னா விருதை எஸ். சுனில் குமார், இசை செம்மல் விருதை சுருதி சங்கர் குமார், ரைசிங் ஸ்டார் விருதை ஸ்ரியன் ஆர் குந்துர்த்தி (அமெரிக்கா) ஆகியோருக்கு வழங்கினார் முன்னாள் கவர்னர்.

நாட்டிய ரத்னா விருதை அக்ஷ்யா அருண்குமார் (அமெரிக்கா), திவ்யா ரவி (லண்டன்), கவிதா திருமலை (அமெரிக்கா), மஹதி கண்ணன், நித்யா நரசிம்மன் (அமெரிக்கா), பல்லவி ஆனந்த் (லண்டன்), பிரணதி ராம் ஆகியோருக்கும், கலா சேவா ரத்னா விருதை கலா பி சுவாமிக்கும் (அமெரிக்கா) வழங்கினார்.

சர்வதேச புகழ் நாட்டியக் கலைஞர் அலர்மேல் வள்ளி, முன்னணி நூலாசிரியர், பத்திரிகையாளர் சுசிலா ரவீந்தரநாத் இருவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்னர் வெங்கடகவி வைபவம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பார்கவி பாலசுப்பிரமணியனுடன், சவும்யா ஆச்சார்யா, அர்ச்சனா உபாத்யாயா, சமன்வி இணைந்து பாடினார்கள். வயலின் : அனந்த கிருஷ்ணன், மிருதங்கம் :அக்ஷய், அனந்தபத்மநாபன், கடம்: சந்திரசேகர சர்மா ஆகியோர் பக்கவாத்யக் கலைஞர்கள்.

வாழ்நாள் சாதனையாளர்கள் விருது பெற்ற இந்து என்.முரளியும், நாட்டிய மேதை குரு ராதாவும் ஏற்புரையாற்றினார்கள்.

108 கர்ண முத்திரை குட்டி பேனர்

மேடையின் பின்புலத்தில் நிறுவன ஆசிரியர், ‘மக்கள்குரல்’ எம்.எஸ்.சின் புன்னகை சிந்தும் உருவப்படம், எம்.ராஜமாணிக்கம் – ராகவன் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போல வழக்கமான இசை மும்மூர்த்திகளின் பேனரோடு, நாட்டியக் கலையில் 108 கர்ண முத்திரைகளை விளக்கும் விதவிதமான புகைப்பட குட்டி பேனரும் பின்புலத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் முரளிராகவன் வரவேற்புரையாற்றினார். முடிவில் ஆர்.முத்துகுமார் நன்றி கூறினார்.

நாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட நாட்டியக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் பலரும் விழாவுக்கு வந்திருனர்.

‘மக்கள்குரல்’ எம்.எஸ். கனவை நனவாக்க…

கர்நாடக இசையிலும் – நாட்டியத்திலும் தனி ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருந்தவர் ‘மக்கள்குரல் – டிரினிட்டி மிரர்’ பத்திரிகைகளின் நிறுவனர் – ஆசிரியர் எம்.சண்முகவேல் (எம்எஸ்). தீவிர இசைப் பிரியர். பாரம்பரியக் கலைகளின் அருமை – பெருமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தணியாத தாகம் கொண்டிருந்தவர்.

பரதம் ஆடும், இசை பாடும், வாத்தியக் கருவிகள் இசைக்கும் இளம் கலைஞர்களைக் கண்டறிந்து அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் குடியேறி இருக்கும் நம்ம ஊர் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்ட மேடை அமைத்துத் தர வேண்டும் என்று விரும்பியவர். அவரின் கணவை நனவாக்கும் விதத்தில் ‘மக்கள்குரல் – டிரினிட்டி மிரர்’ இசை – நாட்டியக் கலை விழாவை 12 ஆண்டுகளுக்கு முன்னால் (2010–11) துவக்கி, அதை இன்றளவும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *