சிறுகதை

டிராபிக்…! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அன்று மாலை மழை பெய்து ஓய்ந்த நேரம். தார் சாலைகளில் எல்லாம் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. நகர்ந்து கொண்டிருந்தன வாகனங்கள். கொட்டித் தீர்த்த மழையில் சாலையில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நின்று கொண்டே இருந்தன வாகனங்கள்.

“என்ன இது? ஏன் இவ்வளவு கூட்டம் .ஏன் இவ்வளவு வாகனங்கள் நெருக்கடியா இருக்குது. ஏதாவது பிரச்சனையா? ஆக்சிடென்ட் ஏதும் ஆயிடுச்சா? என்ன பிரச்சனை ? என்று வாகனங்களில் இருந்த மக்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள் .

ஒரு மணி நேரம் ஆகியும் இன்னும் இடத்தை விட்டு நகராமலே நின்று கொண்டிருந்தன வாகனங்கள்.

” இந்த டிராபிக் போலீஸ் எல்லாம் என்ன பண்றாங்க. ஹெல்மெட் போடலைன்னா மட்டும் பத்து பேர் இருபது பேர் சேர்ந்து கிட்டு ஹெல்மெட் போடாதவன கொலைகாரன மாதிரி பிடிச்சு அவனுக்கு ஃபைன் போடுறது. விசாரணை பண்றதுன்னு இருக்குற இந்த ஆளுக இவ்வளவு ட்ராபிக் இருக்கு மக்களைப் பற்றி யோசிச்சாங்களா? இங்க இருக்கிறவங்க என்னென்ன வேலைக்கு போவாங்க என்னென்ன பிரச்சனைகள்ல இருக்குறாங்க. ஒருவேளை ஆஸ்பத்திரிக்கு போகலாம் ஆப்ரேஷன் பண்ணலாம். விமானத்தை பிடிக்க போகலாம். என்ன வேணாலும் இருக்கலாம் இல்லையா? அது ஏன் இவங்களுக்கு தெரிய மாட்டேங்குது”

என்று வாகனங்களில் இருந்தவர்கள் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.

” பேசி என்ன ஆகப் போகுது? ஒன்னும் நடக்கப் போறதில்ல என்று நின்று கொண்டிருந்த வாகனங்களில் இருந்த பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி தூரம் பார்ப்பதும், பின்பு பேருந்தில் ஏறுவதுமாக இருந்தனர் .

” கண்டிப்பா இன்னும் ஒரு மணி நேரம் ஆனா கூட இந்த ட்ராபிக்கை சரி பண்ண முடியாது போல. அவ்வளவு கூட்டம் இருக்கு ” பேசிக்கொண்டார்கள் அந்த சாலையில் நின்றிருந்த வாகனங்களில் இருந்தவர்கள் . டிராபிக் போலீஸ் ஆங்காங்கே நின்று கொண்டு வாகனங்களை சரி செய்து கொண்டுதான் இருந்தார்கள். புற்றீசல்கள் போல வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர் டிராபிக் போலீஸ்காரர்கள்.

இரத்தினம் அவரைச் சுற்றியிருந்த சில ஆட்களுக்கும் தலையைப் பிடித்துக் கொள்வது போல் இருந்தது “என்ன இவ்வளவு பிரச்சினையா இருக்கு. சிக்னலும் சரியா வேலை செய்யல. இந்த வண்டிகள எல்லாம் எப்படி கடத்தி

விடுறது? “என்று தெரியலயே? என்று நெற்றியைப் பிடித்துக் கொண்டுத் தலைவலி தாங்க முடியாமல் அத்தனை வாகனங்களையும் சீர்படுத்திக் கொண்டிருந்தார் ரத்தினம், போக்குவரத்துக் காவலர். ஆனால் திருப்பத்தில் இருந்த வாகனங்கள் எல்லாம் திரும்பிச் சென்று கொண்டே இருந்தன .

“அங்க யாரு இருக்கா. நம்ம ஆளு ஏதும் இருக்காங்களா? என்று சந்தேகப்பட்ட ரத்தினம் அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் போலீசைக் கேட்டார்.

” இல்ல சார். நம்ம ஆளுங்க அங்க யாரும் இல்லையே? ஆனா அங்க நல்லா டிராபிக் கிளியரா போயிட்டு இருக்கு. எப்படின்னு தெரியலையே?

என்று சந்தேகத்துடன் சொன்னார் இன்னொரு டிராபிக் போலீஸ்.

” அங்க நம்ம ஆளு இல்லைங்கறீங்க. எல்லாமே நாம இங்க தான் இருக்கோம் .பெறகு எப்படி? அந்தப் பாதையில மட்டும் வண்டிகள் சரியா போய்ட்டு இருக்கு “

என்று ரத்தினம் கேட்க

சரி இருங்க நான் போயி அங்க என்னன்னு பாத்துட்டு வர்றேன் என்ற ரத்தினம் கிளம்புவதற்குள் அந்த வழியாக வந்த ஒருவர்

“சார், நீங்க இவ்ளோ பேரு இருந்துட்டு ஒரு வேலை கூட செய்யாம இருக்கீங்க. அங்க போய் பாருங்க. ஒரே ஆளு எவ்வளவு அழகா அங்க டிராபிக்க கிளியர் பண்ணிட்டு இருக்காருன்னு. அவரப் பாத்து தெரிஞ்சுக்கோங்க”

என்று கொஞ்சம் கறாராகப் பேசிவிட்டு சென்றான் அந்த வழிப்போக்கன்.

” யார்ரா இது ?அப்படி யாரும் நமக்கு தெரியாம டிராபிக்க சரி பண்ணிக்கிட்டு இருக்குது”

என்று நினைத்த ரத்தினம் ஓடிப் பார்த்தபோது

“இவர் நம்ம டிராபிக் போலீஸ் இல்லையே? ஆனா இவர எங்கேயோ நாம பாத்திருக்கிறோம்” என்ற சிந்தனையோடு அவரின் அருகே சென்றார் ரத்தினம்.

முகிலன் அங்கு வாகனங்களை அழகாகச் சீர்படுத்தி, ஒழுங்குப்படுத்தி டிராபிக்கை கிளியர் செய்து கொண்டிருந்தான். இதை கொஞ்ச நேரம் பார்த்த ரத்தினம்

“நீங்க யாரு ? என்று கேட்டபோது

நான் ஒரு பப்ளிக் சார் என்றான் முகிலன்

“உங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பாத்திருக்கேனே?

என்று முகிலனை உற்றுப் பார்த்தார், ரத்தினம்

” ஆமா சார் நானும் உங்கள பாத்திருக்கேன். ஒரு வாரத்துக்கு முன்னாடி இதே ரோட்டுல நான் வண்டி ஓட்டிட்டு போகும்போது கோட்டத் தாண்டிட்டேன்னு என்ன புடிச்சு ஃபைன் போட்டீங்க. நான் எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். நீங்க விடல. உன்னால தான் டிராபிக் ஆகிப்போச்சுன்னு பிரச்சனை ஏற்படுத்துனிங்க. அது நீங்கதானே சார்”

என்று முகிலன் கேட்க

“ஆமா” என்று தலையாட்டினார், ரத்தினம். அத்தனை வாகனங்களையும் சீர்படுத்தி ஒழுங்குபடுத்தி அனுப்பி கொண்டிருந்தான் முகிலன். எந்த வாகன நெரிசல் இல்லாமல் கோட்டை தாண்டிய குற்றத்திற்காக பொய் சொல்லி டிராபிக் ஆகிவிட்டது என்று முகிலனிடம் பணத்தைப் பிடிங்கிய ரத்தினத்திற்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் உண்மையாகவே இன்று டிராபிக் நிறைந்திருந்தது.

முகிலன் தான் இந்த வாகனங்களைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தான்.

எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார் ரத்தினம்.

டிராபிக் மெல்ல மெல்லச் சீராகின.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *