ஆர் முத்துக்குமார்
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த உலகின் முன்னணி தொழிலதிபரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க்கிற்கு இது பலவிதங்களில் நன்மைகள் பெற இருப்பது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
டிரம்ப் தனது முதல்கட்ட அறிக்கைகளில், அரசு செலவுகளை குறைப்பதற்காக பல்துறை சிறப்பாளர்களை தனது நிர்வாகத்தில் அழைப்பதாக அறிவித்துள்ளார். அதனடிப்படையில், எலோன் மஸ்க்கும் டிரம்பின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு செலவுகளை குறைத்து, தனியார் துறையின் ஆதிக்கத்தை அதிகரிக்கத் துடிக்கும் டிரம்புக்கு தொழில் துறையில் சாகசம் காட்டிய மஸ்க் பெரிய பங்காற்றலாம் என்பதே சர்வதேச அரசியல் அறிஞர்களின் கருத்து.
மஸ்கின் “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனமும் இதன் மூலம் பலனடையக்கூடும். அமெரிக்க அரசு செயற்கைக் கோள்களை விண்ணில் அனுப்புவது, உளவு செயற்கைக் கோள்களை தயாரிப்பது போன்ற பணிகளில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சாத்தியமான ஒப்பந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்பு துறைகள், புதுப் புது தொழில்நுட்ப முன்னேற்றங்களை விரும்பி ஆதரித்து வருவதால் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு பெரும் நிதியுதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் கார்ப்பரேட் வரியை குறைப்பேன் என உறுதி தந்துள்ளார். மஸ்க் போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கு இது பெரும் நன்மை தர இருக்கிறது.
வரி சலுகைகள், வரி விதிகளில் இலகுவான மாற்றங்கள் மூலம் மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக நன்மை அடையக்கூடும். டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, டெஸ்லா பங்குகள் 12% உயர்ந்திருப்பது கூட இதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.
உக்ரைன் தொடர்பான அமெரிக்காவின் நிதி உதவிகளைப் பற்றி டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன் தனது ஆட்சியில் நிதி ஆதரவை குறைப்பேன் என்றும் கூறியுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியபோது மஸ்க் கூடக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் உளவு செயற்கைக்கோள் திட்டங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு முக்கிய பங்கு கிடைக்கலாம் எனவும் துறையறிஞர்கள் கணிக்கின்றனர்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பை வாழ்த்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைத்தபோது கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கையும் தொலைப்பேசியில் உடன் பேச வைத்து இருக்கிறார் என கூறப்படுகிறது!
மேலும் உக்ரைன் சமீபமாய் வெளிநாட்டு இராணுவ உதவி மற்றும் பட்ஜெட் ஆதரவை பெருமளவில் சார்ந்துள்ளது.
2022 பிப்ரவரியில் மோதல் தீவிரமடைந்ததில் இருந்து, 70 பில்லியன் டாலர் இராணுவ உதவி உட்பட உக்ரைன் அரசாங்கத்திற்கு 106 பில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது, மேலும் உக்ரைனுடன் “பல்வேறு அமெரிக்க நடவடிக்கைகளுக்கு” நிதியுதவியாக $70 பில்லியன் செலவிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மொத்தம் $133 பில்லியன் நிதி, மனிதாபிமான, அகதிகள் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. நேட்டோவில் இருக்கும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நோர்வே மற்றும் இங்கிலாந்தும் பில்லியன்களை செலவிட்டுள்ளன.
டிரம்ப், தனது வெற்றிகரமான 2024 தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்திய சூசன் வைல்ஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார், இந்த பதவிக்கு வரும் முதல் பெண்மணி வைல்ஸ் ஆவார்.
டிரம்பின் முக்கிய பிரசார அம்சமாக அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது இருந்தது. சுருக்கமாக, டிரம்பின் வெற்றி, எலோன் மஸ்க்கிற்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும்.
டிரம்பை பொறுத்தவரை அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது மற்றும் தொழில் துறையை ஊக்குவிப்பது என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அவருடைய கவனம் முழுவதும் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தான் இருக்கும் . அதே வேளையில் அவர் மற்ற நாடுகளோடு வர்த்தக ரீதியான உறவில் மாற்றங்களை கொண்டு வர இருப்பதையும் பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டிரம்ப் முதல் முறை அமெரிக்க அதிபராக பதவி வகித்த போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்தார்.
மேலும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வேளாண் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தையும் விதித்தார். பின்னர் இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்புக்கு சென்று இந்த பிரச்சினையை சரி செய்து கொண்டது நினைவிருக்கலாம்.