வாஷிங்டன், நவ.8-
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம் அமெரிக்க-இந்திய உறவு பலப்படும் என்று அங்குள்ள தொழில் அதிபர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக்கணிப்புகளையும் மீறி முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் இருநாடுகளின் உறவு பலப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
அவரது இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி தொழில் அதிபர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் தீர்க்கமான வெற்றிக்கு வாழ்த்துகள். நாங்கள் அமெரிக்காவின் பொற்காலத்தில் இருக்கிறோம், அனைவருக்கும் நன்மைகளை கொண்டு வர டிரம்பின் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
தென் கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹேலி, டிரம்பின் வலுவான வெற்றிக்கு வாழ்த்துகள். இப்போது, அமெரிக்க மக்கள் ஒன்று கூடி, நம் நாட்டிற்காக பிரார்த்தனை செய்து, அமைதியான மாற்றத்திற்கான செயல்முறையைத் தொடங்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.
லூசியானா மாநில முன்னாள் கவர்னர் பாபி ஜிண்டால் கூறுகையில், இது அமெரிக்காவுக்கு சிறப்பான நாள். கொஞ்சம் கொண்டாடுவோம். பிறகு நம் நாட்டை மீண்டும் பாதையில் கொண்டு வருவதற்கான கடின உழைப்பைத் தொடங்குவோம் என்றார்.
தொழில் அதிபரும், அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி கூறுகையில், அமெரிக்காவுக்கு இது விடிவுகாலம். ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டிரம்பிற்கு வாழ்த்துகள். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க-இந்திய உறவு மேலும் பலப்படும். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் இரு நாடுகளும் இணைந்து வழிநடத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதில் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
சமூக ஈடுபாடு தளமான இந்தியாஸ்போராவின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் பிரசாரத்தின் முக்கிய நிதி சேகரிப்பாளரான அஜய் ஜெயின் பதுரியா, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்துகள். அதே நேரம் அமெரிக்கா தனது முதல் பெண் அதிபரை தேர்ந்தெடுக்க மீண்டும் தவறிவிட்டது. எல்லைப் பிரச்சினைகள், பொருளாதாரம், குடியேற்றம், குற்றங்கள் மற்றும் போர்களைக் கையாள்வதற்கான மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர் மக்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன் என்று கூறினார்.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட பிரபல தொழிலதிபர் அல் மேசன் கூறுகையில், இரண்டு கொலை முயற்சிகளில் இருந்து கடவுள் டிரம்பை காப்பாற்றினார். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. டிரம்ப் அமெரிக்க மக்களுக்கும் மற்ற உலக மக்களுக்கும் சிறந்த தலைவராக இருக்கப்போகிறார். போர்கள் இல்லாத பாதுகாப்பான உலகம் இருக்கும். என்றார்.
இந்திய–அமெரிக்க நட்பு கவுன்சில் தலைவர் டாக்டர் கிருஷ்ணா ரெட்டி, அமெரிக்க-இந்திய உறவுகளின் தொடக்கமாகும், மேலும் உலகை மீண்டும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். மீண்டும் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க இது இந்திய அமெரிக்கர்களின் பெரும் பலமாகும், இந்த வெற்றியில் இந்திய அமெரிக்கர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றார்.