நியூயார்க், செப். 30–
டிரம்ப் தோற்றால் ஒரு கட்சி ஆட்சிக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்வர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப்பிற்கு ஆதரவாக உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
மஸ்க்கின் பயம்
அதில்,” அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்றால், நிச்சயம் இதுதான் கடைசி அமெரிக்க தேர்தல் ஆகும். காரணம் அதற்கு பிறகு ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது. இது அமெரிக்கர்கள் சிலருக்கு தான் தெரிகிறது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கட்சியினர் ஊக்கமளிக்கின்றனர்.
அமெரிக்காவில் குடியேறுபவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கினால் அமெரிக்கா ஒரு கட்சி ஆட்சி முறைக்கு சென்றுவிடும். பின்னர் ஜனநாயகம் அழிந்துபோய் விடும்” என்று எலான் மஸ்க் கூறி உள்ளார்.