தெக்ரான், ஜூன் 24–
கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ந்தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவான சூழலில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தன.
இதையடுத்து, கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா, யூஏஇ உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார். மேலும் இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்
ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ஈரான் அந்த தகவலை மறுத்தது. இந்த நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. மேலும் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஊடகம் இந்த செய்தியை வெளியிடுவதற்கு சற்று முன்பு கூட ஈரானின் ஏவுகணை தெற்கு இஸ்ரேலை தாக்கியதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவும், ஈரானும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் எந்த நிலைபாட்டை எடுக்கப்போகிறது என்பது கேள்வியாக உள்ளது
![]()





