தலையங்கம்
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது நிர்வாகக் கொள்கைகள் இந்தியாவிற்கு எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மதிப்பீடு செய்யும் தருணம் வந்துவிட்டது.
பணவீக்கக் கட்டுப்பாடு, தேசிய எரிசக்தி அவசரநிலை மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிக்கும் திட்டங்கள் ஆகியவை டிரம்பின் தலைமையில் அமெரிக்காவின் முக்கிய முன்னுரிமைகளாக மாறியுள்ளது.
‘டிரில் பேபி டிரில்’, Drill என்ற கோஷத்துடன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் உலக எண்ணெய் விலையில் அமெரிக்கா அதிக ஆதிக்கம் செலுத்தும் எனக் கருதப்படுகிறது. இதன் நேரடி தாக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தில் காணப்படும், ஏனெனில் இந்தியா அதன் எண்ணெய் தேவையில் பெருமளவு இறக்குமதியை அமெரிக்காவிலிருந்து பெருவது அறிந்ததே.
மேலும், அமெரிக்காவின் பாலின அடையாளங்களை இரண்டாக (ஆண், பெண்) மட்டுமே காண்பிக்கும் புதிய கொள்கை சமூக ரீதியாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இது பல்வேறு சமூக அமைப்புகளின் பார்வையில் வியப்பை ஏற்படுத்தும் ஒரு பரிமாணமாகும்.
மேற்கூறியவைகளுடன், அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பிரச்சனை இந்திய தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கான H-1B வீசா வழங்குதலில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை, அமெரிக்க சந்தையில் பெரும் இருப்பைக் கொண்டுள்ளது என்பதால், இது பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் எதிர்காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
பனாமா கால்வாய் தொடர்பான டிரம்பின் அறிக்கைகள் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக உறவுகளில் மோதல்களை உருவாக்கக்கூடியது. பனாமா கால்வாய் வழியாக இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகள் இடம்பெறுவதால், இதனை சீனாவிடம் இருந்து மீட்டெடுப்பது குறித்த அவரது திட்டங்கள் இந்திய வர்த்தக உலகின் கவனத்தையும் பெறுகிறது.
பைடன் தலைமையிலான நிர்வாகம், புலம்பெயர்ந்தோர் நெருக்கடியைக் கையாண்ட விதத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
டிரம்ப், அமெரிக்காவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று பேசினார். அமெரிக்கா தனது செல்வத்தை பெருக்கும், தனது எல்லையை விரிவுபடுத்தும், செவ்வாய் கிரகத்தில் கொடியை நாட்டும் என்று அவர் உறுதிபூண்டார். “நாங்கள் நட்சத்திரங்களை அடைந்து செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கக் கொடியை ஏற்றுவோம்,” என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவராக இருப்பேன் என்று டிரம்ப் தனது தொடக்க உரையில் கூறினார்.
காஸாவில் ஹமாஸிடம் பணய கைதிகளாக இருந்த மூன்று இஸ்ரேலியர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் குடும்பத்தினருடன் இணைந்ததை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“உலகின் மிகப் பெரிய, சக்திவாய்ந்த மற்றும் மதிப்புக்குரிய நாடாக அமெரிக்கா அதன் சரியான இடத்தை மீண்டும் பெறும். உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், அவர்கள் போற்றும் வகையிலும் மாறும்” என்று டிரம்ப் கூறினார்.
இன்று முதல், டிரம்பின் ஆட்சிக்காலம் துவங்கி விட்டது, எதிர்பார்க்கப்பட்டது போல் பல அதிரடி முடிவுகளும், அரசியல் ஆதாய அறிவிப்புகளும் வந்த வண்ணம் இருக்கிறது.
டிரம்ப் தனது அதிகார சக்தியை முன்பே நன்கு உணர்ந்தவர், உலக நன்மையையும் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட உலகமே எதிர்பார்ப்பதையும் உணர்ந்தவர்!
இந்தியாவின் பார்வையில், டிரம்பின் ஆட்சிக் காலம் ஆபத்து மற்றும் வாய்ப்புகள் இரண்டையும் தரக்கூடியது. பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை தேடி முன்னேறுதல் அவசியமாகிறது, குறிப்பாக விலைமதிப்பில்லாத எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.