புளோரிடா, செப். 16–
அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தமுறை காயம் ஏதுமின்றி டிரம்ப் தப்பியிருந்தாலும் 3 மாதங்களில் இரண்டாவது முறையாக டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் புளோரிடாவில் உள்ள கோல்ப் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விளையாடிக் கொண்டிருந்த பகுதியைக் குறிவைத்து 4 ரவுண்ட் துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டது. உடனடியாக டிரம்ப்பின் பாதுகாவலர்கள் துப்பாக்கிக் குண்டுகள் வந்த திசையை நோக்கி தாக்குதலைத் தொடங்கினர். உடனே அங்கிருந்த மர்ம நபர் தான் கொண்டு வந்த உடைமைகளை விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து காரில் தப்பி உள்ளார்.
இது குறித்து டிரம்ப்பின் பாதுகாப்புக்கான ரகசிய சேவை ஏஜன்ட் கூறுகையில், “டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஏகே 47 துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அவர் விட்டுச் சென்ற பையில் தூரத்தில் இருப்பதை துல்லியமாகக் காணும் ஸ்கோப் ஒன்றும் இருந்தது. அந்த நபர் காரில் தப்பியதை நேரில் கண்ட நபர் எடுத்த புகைப்படத்தில் அவரது வாகன எண் பதிவாகி இருந்தது. அதைவைத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது அடையாளமும் தெரியவந்துள்ளது. அவர் 58 வயதான ரயான் ரூத் வெஸ்லி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆயினும், துப்பாக்கிச் சூடு காரணம் குறித்து ஏதும் தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
2வது முறையாக…
இந்தச் சம்பவத்தை அமெரிக்காவின் எப்பிஐ புலனாய்வு அமைப்பு ‘படுகொலை முயற்சி’ வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் அவரது காதில் காயம் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் அவரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து அதிபர் பிடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், அமெரிக்காவில் எந்தவிதமான அரசியல் வன்முறைக்கும் இடமில்லை. டிரம்ப் நலமுடன் இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. டிரம்ப் தாக்குதல் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நலமாக இருக்கிறேன்
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு தான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக டிரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இருந்த இடத்திற்கு அருகாமையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதுதொடர்பான வதந்திகள் பரவுவதற்கு முன்னர் நான் உங்களுக்கு இதனைக் கூற விரும்புகிறேன். நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கின்றேன்.எனது வேகத்தை எதுவும் குறைக்காது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் வெளியிட்டு உள்ள எக்ஸ் ஊடக பதிவில், புளோரிடா பகுதிக்கு அருகே அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துப்பாக்கி சூடு நடந்தது குறித்து அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டு உள்ளார்.
அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.