கத்தியுடன் சுற்றியவர் சுட்டுக்கொலை
நியூயார்க், ஜூலை 17–
டிரம்ப் கலந்து கொள்ள இருந்த கூட்டம் அருகே, கத்தியுடன் சுற்றித் திரிந்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிரம்பை மீண்டும் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்டு டிரம்பைக் கொலைச் செய்யும் நோக்கில், கத்தியுடன் சுற்றித் திரிந்த ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் களத்தில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த சம்பவத்தின் போது, துப்பாக்கி குண்டு காதை கிழித்தபடி சென்றதால் அவர் உயிர் தப்பினார்.
கத்தியுடன் திரிந்தவர் கொலை
இந்த சம்பவம் தொடர்பாக தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற வாலிபர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று பென்சில்வேனியா நகரில் நடைபெறும் குடியரசு கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டொனால்ட் டிரம்ப் வருவதாக இருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த மர்ம நபர் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இன்று அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவரை போலீசார் பிடிக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதால் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், வீடு இன்றி தெருவில் வசித்து வந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து டிரம்ப் மீது கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருவது, அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.