ஜெருசலேம், ஜூன் 16–
‘‘அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:–
இஸ்ரேலின் தாக்குதல், ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் விரும்புகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது. முதல் எதிரியாக டிரம்புக்கு ஈரான் இலக்கு நிர்ணயித்துள்ளது. அவர் ஒரு நல்ல தலைவர். மற்றவர்கள் அவர்களுடன் பேரம் பேச முயற்சிப்பதை அவர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஈரானின் அணு ஆயுத திட்டத்தை எதிர்ப்பதில் டிரம்பின் ‘இளைய கூட்டாளி’ போல் நான் இருக்கிறேன். எனவே ஈரான் என்னையும் குறிவைத்துள்ளது. எனது படுக்கையறை ஜன்னல் அருகே ஏவுகணை வீசப்பட்டது. இஸ்ரேல் தற்போது அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. எனவே ஆக்ரோஷமாக செயல்படுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக உள்ளது.
இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஈரான் நாட்டின் ஆட்சியாளரும் மதத் தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான்–இஸ்ரேல் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.