ஒரு இரவு நேரம் குமரேசனும் முத்துவும் காலாற நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
ஜில்லென்ற காற்று அவர்களைத் தழுவிக் கொண்டு சென்றது. குமரேசன் அவ்வளவு தூரம் நடப்பவர் அல்ல. மருத்துவப் பணியில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கும் மாண்புடையவர். எளிமையை எப்போதும் கைவிடாதவர்.
அவர் நெடுந்தூரம் நடந்ததை முத்து கவனித்து கேட்டான்.
‘என்ன சார்? இவ்வளவு தூரம் நடந்து வாரீங்க?’ என்று கேட்டதற்கு
‘இது தான் மைண்ட்’ என்று சொன்னார். ‘ நம்ம மனசு என்ன சொல்லுதோ அதை செய்யணும். இப்ப மனசு நடக்க சொல்லுது. அதை செய்கிறேன்’ என்று சொல்லியபடியே குமரேசன் முத்து இருவரும் தார் சாலை வழியே நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் சென்று வந்த ஒரு விழா நிறைவடைந்து, அந்த விழா நடக்கும் இடத்திலிருந்து காலாற நடந்து வந்தது அவ்வளவு பெரிதாக தெரியாமல் இருந்தது.
‘சாப்பிடுவோமா?’ என்றார் குமரேசன்.
‘சாப்பிடலாமே’ என்றான் முத்து.
சாலையின் வலது ஓரத்தில் இருந்த பாண்டியன் ஓட்டலுக்கு இருவரும் சென்றார்கள்.
அங்கே குமரேசனின் உருவத்தைப் பார்த்தவர்கள், ‘சார் மேலே ஏசி இருக்கு அங்க போங்க’ என்று சொல்ல…
‘இல்ல பரவாயில்லை கீழே உட்கார்ந்து கொள்கிறோம்’ என்றார்.
கீழே பார்த்த போது ஏற்கனவே சாப்பிட்டுப் போனவர்களின் இலைகளை எடுக்காமல் அப்படி அப்படியே அசுத்தமாக இருந்தது.
முத்துவும் குமரேசனும் வரவே இலையை சுத்தம் செய்யும் பெண் வேறு வேலை செய்து கொண்டிருந்தார்.
‘சீக்கிரமா சுத்தம் பண்ணுங்க சீக்கிரமா டேபிளை சுத்தம் பண்ணுங்க’ என்று கல்லாவில் இருந்தபடியே கத்திக் கொண்டிருந்தார் முதலாளி.
வேறு வேலையில் ஈடுபட்டிருந்த அந்தப் பெண் வருவதற்கு சற்று தாமதமானது.
அந்த டேபிளில் விழுந்த தண்ணீர் கீழே வழிந்து ஓடியது. பார்ப்பதற்கு கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும் குமரேசனும் முத்துவும் நின்று கொண்டிருந்தார்கள்.
ஒடிசலான தேகம் கொண்ட ஒரு பெண்மணி டேபிளைச் சுத்தம் செய்வதற்கு வந்தாள்.
அப்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை; குமரேசன் கல்லாவில் போய் பணம் கொடுத்து கொண்டிருப்பதைப் பார்த்தான் முத்து.
சாப்பிட்ட பிறகு தானே பில் கொடுப்பதற்கு கல்லாவிற்கு பாேவாேம். இப்போதே பணத்தைக் காெடுக்கிறார். ஏன்? என்று யோசிக்கலானான் முத்து.
அவர் பில்லைக் கொடுக்கவில்லை என்பது பின்னர் தான் முத்துக்குத் தெரிய வந்தது.
அந்த ஒடிசலான தேகம் கொண்ட அந்தப் பெண்மணி டேபிளில் இருந்த இலைகளையும் தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
சட்டென அந்தப் பெண்மணியிடம் பணத்தை கொடுத்தார் குமரேசன்.
டேபிளைச் சுத்தம் செய்த பெண்,
வேண்டாம் என்று மறுத்த போது
இல்ல பிடிங்க
என்று அந்தப் பெண்ணின் கையில் கொஞ்சம் பணத்தை திணித்தார் குமரேசன்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் சப்ளை செய்பவர்களுக்கு மற்றவர்களுக்கும் முடிந்தால் டிப்ஸ் கொடுப்பார்கள்.
இது புதுசா இருக்கே? சாப்பிடுவதற்கு முன்னாலேயே டேபிளை சுத்தம் செய்த பெண்ணுக்கு பணம் கொடுத்தது முத்துக்கு வியப்பாக இருந்தது.
அப்போதுதான் அவனுடைய புத்தி சொல்லியது.
இரண்டு மூன்று முறை கல்லாவில் இருந்த முதலாளி கூப்பிட்டபோது அந்தப் பெண்மணிக்கு கொஞ்சம் கோபம் வந்து இருக்கலாம் அல்லது இந்த வேலையெல்லாம் செய்து தான் நாம் பிழைப்பு நடத்த வேண்டி இருக்கிறதே என்று அவள் நொந்து போயிருக்கலாம்.
ஏதோ ஒரு வகையில் அவளின் மனம் கஷ்டப்பட்டு இருக்கும். அந்த மனதை ஆற்றுப்படுத்துவதற்குத்தான் குமரேசன், அந்தப் பெண்ணின் கையில் பணத்தைத் திணித்தார் என்பது முத்துவுக்கு விளங்கியது.
முத்துவும் குமரேசனும் அமர்ந்தார்கள் .
அவர்கள் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது அவர்கள் இருவருக்கும் நிரம்பியிருந்தது வயிறு மட்டுமல்ல; மனமும்தான்.