செய்திகள்

டிடிவி தினகரனுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி, ஏப். 18–

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு, 10 நாட்களுக்குள் மீண்டும் அமலாக்கத்துறை இரட்டை இலை வழக்கில் விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த தினகரன், இரட்டை இலை சின்னத்தை தன் தரப்புக்கு மீட்பதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்ற தரகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில் தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

11 மணி நேர விசாரணை

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தை தினகரன் மீது தொடுத்தது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான டிடிவி தினகரனிடம் பகல் 12. 30 முதல் இரவு 11 மணி வரை விசாரணை நடத்தினார்கள்.

விசாரணை முடிந்து வெளியே வந்த தினகரன், “நான் நிரபராதி. இந்த விவகாரத்தில் யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள். அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வருவேன்” என்று கூறியிருந்தார்.

இந்த அமலாக்கத் துறை விசாரணை முடிந்து ஒருவாரமே ஆன நிலையில், மீண்டும் தினகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகுமாறு டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.