செய்திகள்

டிஜிட்டல் யுக மருந்தகம்

Makkal Kural Official

தலையங்கம்


டிஜிட்டல் யுகத்தில் நாம் பல துறைகளில் நவீனங்களை கொண்டு வந்து விட்டோம், குறிப்பாக டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளில் உலகிற்கே நல்ல முன்னோடியாக இருக்கிறோம்.

ஆனால் உயிர்காக்கும் பல பிரிவுகளில் நவீனங்களை கொண்டு வரத் தயங்குகிறோம்.

குறிப்பாக மருந்து மாத்திரை விற்பனை ஆண்டுகளாய் நம்மிடம் இருக்கும் முறையை மட்டுமே பின்பற்றி வருவது சரிதானா? என யோசிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

உலகளாவிய மிகப்பெரிய சிக்கல்களாக இருப்பது மருந்து எதிர்ப்பு நோய்கள் அதிகரிப்பாகும். இவை உருவாக மனிதனே முக்கிய வில்லன்களாகும்.

சுகாதாரச் செலவுகள் அதிகரிப்பதற்கும் இதுவும் ஓரு முக்கிய காரணமாகும்.

ஒரே டாக்டரின் குறிப்பை பல மருந்தகங்களில் பெற முடியும்! உயிர் காக்கும் மருந்து குறிப்பிட்ட வீரியத்துடன் குறியிட்ட அளவே சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் அல்லவா? அப்படி இருக்க மருந்து மாத்திரைகளை வரையறையின்றி சாப்பிடும் குழ்நிலை தடுக்கப்பட வேண்டும் அல்லவா?

அத்துடன் மருத்தவர்கள் எழுதிய மருந்துக் குறிப்புகள் பலமுறை படிக்கமுடியாத அளவுக்கு கிறுக்கலாக இருப்பதும் இதனால் மருந்து வினியோகத்தில் தவறுகள் ஏற்படுவதும் பிரச்சனையாக உள்ளது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் அதிரடி தீர்வு டிஜிட்டல் முறைதான்.

இந்த டிஜிட்டல் முறைமையின் முக்கிய அம்சமாக, ஒவ்வொருவருக்கும் ஆதார் எண்ணைப் போன்ற ஒரு டிஜிடல் எண்ணை உருவாக்க வேண்டும். அதை அவர்களின் மருந்து குறிப்புகளுடன் இணைக்கப்பட., அவர்கள் மருந்து வாங்க மருந்தகத்துக்கு செல்லும் போது தரவுத்தொகுப்பை அணுகி, குறிப்புகளின் விவரங்களை, அதாவது மருத்துவர் பரிந்துரைத்த துல்லியமான மருந்துகளையும் அளவுகளையும் சரிபார்த்து தர முடியும்.

இந்த டிஜிட்டல் முறை, தவறான மருந்து பயன்பாட்டை தடுக்கும். மருந்து விநியோகத்தின் கண்காணிப்பையும் நிர்வாகிக்கவும் முடியும். ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் குறிப்புகள் முறையை செயல்படுத்துவதன் மூலம், மருந்து நுகர்வு மற்றும் தன்னிச்சையான மருந்து பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கலாம். மருத்துவர்கள் எழுதிய குறிப்புகள், நோயாளியின் தனிப்பட்ட அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டு ஆவணமாக டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.

ஒரே டாக்டரின் குறிப்பை பல மருந்தகங்களில் காண்பித்து மருந்து மாத்திரைகள் பெற முயற்சிக்கும் போது இந்த முறை வந்து விட்டால் அதை எளிதாக தடுக்கலாம்.

இது மருந்துகளை சரியாகப் பயன்படுத்தும் முறையையும் தன்னிச்சையாக மருந்துகளை உபயோகிப்பதை தடுக்கவும் உதவுகிறது.

மொத்ததில் நோயாளி கவனிப்புக்கு இது மிகச் சரியான அணுகுமுறை என்பதை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நடைமுறை சிறந்தது என்பதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

டிஜிட்டல் முறை தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டும் அல்ல ஒரு அவசியமான பரிணாமம் ஆகும்.

நமது பொது சுகாதாரத்தை பாதுகாக்கவும் சுகாதார செலவுகளை குறைக்கவும் மருந்து மாத்திரை வீரிய எதிர்ப்பு நோய்களை கட்டுப்படுத்தவும் இந்த டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொள்வது, உலகளாவிய அளவில் சுகாதார சேவையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

இது மருந்து மேலாண்மையில் துல்லியத்தையும் பொறுப்பையும் உறுதி செய்யும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *