செய்திகள்

டிசம்பர் 21–ந் தேதி மலேசியாவில் சர்வதேச ஆன்மிக தமிழ் மாநாடு

Spread the love

சென்னை, ஜூலை.19-

சர்வதேச ஆன்மிக தமிழ் மாநாடு மலேசியாவில் டிசம்பர் 21 ந் தேதி தொடங்குகிறது.

பிரம்மா குமாரிகள் அமைப்பு கடந்த 1936-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலையை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 130 நாடுகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களின் மூலமாக ஆன்மிக ஞானம் மற்றும் ராஜயோக தியானத்தை கற்றுக்கொடுத்து வருகிறது.

மலேசியாவில் 30-க்கும் மேற்பட்ட நிலையங்களும், துணை நிலையங்களும் உள்ளன. மலேசிய பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் அதன் தலைமையகமான ஆசிய ரீடிரீட் மையத்தில் வருகிற டிசம்பர் 21 மற்றும் 22-ந் தேதிகளில் ‘ஆன்மிக சிந்தனையில் சமூக கட்டுப்பாடு பரிபூரண வாழ்வும், வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் சர்வதேச ஆன்மிக தமிழ் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அன்பு சார்ந்த கல்வி, தலைமைத்துவம், நிர்வாகம், ஆரோக்கியமும் உணவு முறையும், சிகிச்சை, பெற்றோர் இயல், வழிபாடு, வாலிபம், அறிவியல், மனிதநேயம் போன்ற தலைப்புகள் துணை கருப்பொருளாக கொண்டு ஆய்வு நடத்தப்படுகிறது. முதல் நடவடிக்கையாக, இந்த தலைப்புகளில் தமிழில் கட்டுரைகள், படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகளை படைக்க விரும்புவோர் ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் தங்களின் கருத்து சுருக்கத்தை அனுப்ப வேண்டும். செப்டம்பர் 1-ந் தேதி முழுப்படைப்பையும் வழங்க வேண்டும். அக்டோபர் 1 ந் தேதி முழு படைப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்த கட்டுரைகள் 4 முதல் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். கட்டுரைகள் தமிழில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுரைகளை கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் எழுதி அனுப்பலாம் என்று மலேசிய பிரம்மா குமாரிகள் இயக்கத்தலைவர் டத்தோ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரம்மா குமாரிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *