திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி, நவ. 10–
திருப்பதி திருமலைக்குச் செல்லும் பக்தர்கள், டிசம்பர் மாதத்துக்கான இலவச மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை நாளை முதல் இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், இலவச டோக்கன் மற்றும் ரூ.300 கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது.
நாளை இணையத்தில் வெளியீடு
இந்த இலவச டோக்கன் மற்றும் ரூ. 300 கட்டண தரிசன டோக்கன்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில், மாதந்தோறும் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்கள் நாளை (11ம் தேதி) (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாள்தோறும் 35 ஆயிரம் டிக்கெட் வீதம் டிசம்பர் 1ந் தேதி முதல் 31 ந்தேதி வரை பக்தர்கள், https://tirupatibalaji.ap.gov.in/#/login என்கின்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், 27 ந்தேதி காலை 10 மணிக்கு அதே இணைய தளம் மூலம் திருமலையில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்துகொள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த தரிசன டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். பக்தர்கள் இதை கருத்தில் கொண்டு அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்றும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.