சென்னை, ஆக. 30–
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் விடைத்தாளை மாற்றி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தவறான வழக்கு என்றும், இந்த வழக்கில் தவறாக எண்ணி தன்னை சேர்த்துள்ளதாகவும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குரூப்-1 விடைத்தாள் மாற்றி வைத்த முறைகேடு தொடர்பாக, 65 சாட்சிகளில் 10 பேரிடம் விசாரணை நிறைவடைந்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், 6 மாதத்தில் வழக்கை நடத்தி முடிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி சேஷசாயி உத்தரவு பிறப்பித்தார்.