ஆர்.முத்துக்குமார்
இன்றைய சமுதாய சூழ்நிலையில் சாராய விற்பனையை முழுமையாக நிறுத்தி விட முடியுமா? என்பது கேள்விக்குறியே. ஆனால் அதை நோக்கி பயணிக்க தமிழகம் நேற்று முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
இது பூரண மதுவிலக்குக்கு உறுதியான பயணமாக ஒரு பக்கம் தெரிந்தாலும் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்திட வாய்ப்பு இல்லை என்பதும் புரிகிறது.
கடைகள் தானே மூடப்படுகிறது, சாராய பார்கள் மூடப்பட வாய்ப்பே இல்லை. இன்றைய இளைஞர்கள் குடிபோதைக்கு அடிமையாகுவது குறைந்துள்ளது, ஆனால் பொறுப்புடன் நட்புக்காகவும் அலுவல் காரணங்களாலும் குடிப்பது ஓரு சம்பிரதாயமாகவும் இருப்பது தான் உண்மை!
சர்வதேச நிறுவனங்கள், அமைப்புகள் நம் நாட்டில் முதலீடுகள் செய்ய அனுமதித்த காலத்தில் அவர்களது வாழ்க்கை முறைகளுக்கும் அனுமதி தந்து விட்டோம் அல்லவா? சென்னையில் உள்ள சாராய பார்கள் வழிந்து நிரம்ப முக்கிய காரணங்களில் ஒன்று அலுவலக குடிக் கலாச்சாரம் தான்!
அதை மனதில் கொண்டு பெங்களூரில் மது பிரியர்களுக்காக ‘குளிர் பீர்’ சமாச்சாரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி விட்டனர். ஆகவே சர்வதேச நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அபரீத வளர்ச்சியை கண்டுவிட்டது!
தமிழக இளைஞர்கள் கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரில் படிக்கவும் பணிக்கு சென்று விடுவதும் நிச்சயம் அதிகரித்துத் தான் உள்ளது. இந்த சாராயக் கலாச்சாரத்தில் இளைஞர்களின் மோகம் குடிபோதைக்கு மட்டும் என்பது இல்லை, அவர்களின் மனமகிழ் சமாச்சாரம் மேலைநாடுகளில் இருப்பது போன்று இருக்க வேண்டும், அதில் மகிழ்வாய் வாழ ஆசைப்படுவதும் இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள சாராய பார்களின் வசதிகளை உயர்த்தினால் இன்றைய தலைமுறை அதை விரும்பி இங்கேயே தங்கி விடுவார்களா? அப்படியும் உறுதியாக சொல்லி விடமுடியாது!
ஆனால் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் உருவாகி இருக்கும் நவீன சாராய பார்களும் உணவகங்களும் இன்றைய தலைமுறையின் மிகப்பெரிய ஈர்ப்பாக இருப்பதை பார்த்தால் அரசு வருங்காலத்தில் எப்படிப்பட்ட முடிவு எடுக்கப்போகிறது? என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது. அதற்கான விடையை உடனே கூறிவிடமுடியாது, காரணம் இது தனிநபர் சுதந்திரம் முதல் பல காலத்தின் கட்டாய சமாச்சாரங்களின் அவசியமும் அடங்கி இருக்கிறது.
ஆனால் நேற்று முதல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. சிரமமின்றி கடைகள் மூடப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகளை தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதற்கிடையே, ‘‘தமிழகத்தில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்’’ என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிறுவனம் கடந்த மாதம் தொடங்கியது. பகுதி கண்காணிப்பாளர்கள், மண்டல மேலாளர்கள் மூலம் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மூடப்பட வேண்டிய கடைகள் பட்டியலிடப்பட்டன.
பின்னர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு கடைகளை மூடுவதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஒன்று நிச்சயம் அதிக வியாபாரம் இல்லாத சாராய கடைகள் தான் மூடப்பட்டிருக்கும்! அல்லது அருகருகே அதிக கடைகள் இருந்தவையே மூடப்பட்டு இருக்கும்!
இந்நிலையில் வருங்கால தலைமுறைகள் இதுபோன்று மது சாராயத்திற்கும் போதை சமாச்சாரங்களுக்கும் அடிமையாகாமல் தடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலின், நிபுணர்கள், கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள் குழுமங்களுடன் ஆலோசித்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களது பெற்றோர்களுக்கும் அறிவுரை தரும் நிகழ்வுகள் நடத்திட நல்ல திட்டம் கொண்டு வர வேண்டியதும் அவசியமாகும்.