கோவை, ஏப்.2–
டாஸ்மாக் கடையை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம் என்று கோவையில் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், தமிழக தலைவருமான அண்ணாமலை, ஆனைகட்டி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:–
பிரதமருக்கு பிடித்த பழங்குடி மக்கள் இருக்கும் ஆனைகட்டியில் இருக்கிறோம். மலைப் பகுதிகளுக்கு சிறப்புத் திட்டங்களை மோடி மட்டும் தான் செயல்படுத்தியுள்ளார். இங்கு பள்ளிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். வீடுகள், பைப் குடிநீர், எரிவாயு சிலிண்டர் ஆகியவை மலை வாழ் மக்களுக்கும் வந்து சேர வேண்டும்.
மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் இயற்கையோடு ஒன்றி இருக்கும் ஆனைகட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள மரங்கள் எல்லாம் ஒரு வைரத்துக்கு சமம். அதே சமயம் வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதி குடி பழங்குடி தான். பிரதமர் மோடி தான் பழங்குடியைச் சேர்ந்தவரை ஜனாதிபதி ஆக்கினர். மலை வாழ், பழங்குடி மக்களுக்கு பாதுகாவலன் மோடி தான்.
குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என நம் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் குடிக்க உரிமை இல்லையா என்பார்கள். டாஸ்மாக்கில் இருப்பவை எரிசாராயம், அவற்றை மூடிவிட்டு கள்ளுக்கடையை திறப்போம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:–
குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் தி.மு.க.வினர் ஆட்டி விடுகின்றனர். கச்சத்தீவு தொடர்பாக சில நபர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயங்களை வெளி கொண்டு வந்துள்ளோம். கச்சத்தீவை கொடுத்ததற்காக இலங்கையிடம் இருந்து இந்தியாவுக்கு ஏதும் கிடைக்கவில்லை.
கச்சத்தீவு கிடைத்தால் தான் தமிழக மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். கச்சத்தீவு விவகாரத்தில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். கச்சத்தீவு விவகாரத்தை அறிவியல் பூர்வமாகவும், சட்ட பூர்வமாகவும் பா.ஜ.க. அணுகிறது. கச்சத்தீவு தொடர்பாக மேலும் ஒரு தகவலை ஆர்.டி.ஐ.விடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.