கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் பேட்டி
கள்ளக்குறிச்சி, ஜூன்24-
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து, ‘அளவோடு குடி’ என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும் கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் கூறினார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-:–
இந்த தருணத்தில் நாம் இதை அரசியல் ஆதாயமாகவோ, விமர்சன மாகவோ பார்க்கக்கூடாது. திருவள்ளு வர் குறளில் கள்ளுண்ணாமை என்பதை குறிப்பிட்டு இருக்கிறார். அப்படியென்றால் அப்போது முதல் இது உள்ளது என அர்த்தம். எனவே அதில் இருந்து மீள்வதற்கான வழிகளை நாம் மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
மனோதத்துவ ரீதியாக மதுவை அளவுக்கு மேல் குடிக்கக்கூடாது என்ற பாடத்தை மக்களுக்கு எடுக்க வேண்டும். சாலை விபத்து நடப்பதற்காக போக்குவரத்தை நிறுத்த முடியாது. வாகன வேகத்தை வெகுவாக குறைக்கவும் முடியாது.
ஒரு தெருவில் மருந்து கடைகள் எவ்வளவு இருக்க வேண்டுமோ அதைவிட அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளது. இவர்களை குடிக்காதே என்று அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள், உங்கள் உயிர் தான் முக்கியம் என அறிவுரை கூறும் வகையில் டாஸ்மாக் கடை அருகிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உடனடியாக டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து. இதுக்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளன. அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தபோது இன்னும் மாபியா அதிகமாக இருக்கிறது. இதுதான் உலகம் கற்றுக்கொண்ட பாடம். அதே பாடத்தை தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
வருமானம் ஈட்டும் எந்த அரசும் அதை திரும்ப மக்களுக்கு போய் சேரும் நற்பயனை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.