அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
நியூயார்க், டிச. 02–
அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இணைந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் இதில் இணைந்து பிரிக்ஸ் பிளஸ் என்று மாற்றம் பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 மாதம் முன்பு பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் நடைபெற்றபோது, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது உலக தலைவர்களை தனித்தனியே சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். உலக அளவிளான வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
டிரம்ப் எச்சரிக்கை
மேலும் உலக அளவில் டாலரில் வணிகம் செய்வதற்கு மாற்றாக பிரிக்ஸ் உருவாக்க உள்ள கரன்சியில் வணிகம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. டாலருக்கு நிகரான மற்ற நாட்டு கரன்சிகள் வலுவிழந்து இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் உலக வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்ளாமல் மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் டாலரை புறக்கணிக்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
மேலும் அவருடைய எக்ஸ் வலைத்தள பதிவில், பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் டாலரை நிராகரித்தால், அமெரிக்காவில் பொருள்களை விற்பனை செய்ய குட்-பை சொல்ல வேண்டி இருக்கும் என கூறி உள்ளார். இதனால் ரஷ்யா, இந்தியா, சீனா, வட ஆப்ரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்கா தனது பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதித்தால் உலக பொருளாதாரமே முடங்கி விடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.