செய்திகள்

டாலரை நிராகரித்தால் 100 சதவீத வரி: பிரிக்ஸ் நாடுகளை மீண்டும் மிரட்டும் டிரம்ப்

Makkal Kural Official

நியூயார்க், ஜன. 31–

அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை தோற்றுவித்துள்ளன. இதில் புதிய நாடுகள் சிலவும் சமீபத்தில் இணைந்துள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்யேக கரன்சி உருவாக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதில் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை செயல்படுத்த மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சர்வதேச வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் யோசனையை, நாம் வேடிக்கை பார்த்த காலம் முடிந்து விட்டது.

இந்த நாடுகளிடம் ஒரு உறுதிமொழியை நாங்கள் கோரப் போகிறோம். அவை ஒரு புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க மாட்டேன் என்றும், வலிமைமிக்க அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்க மாட்டேன் என்றும் உறுதியளிக்க வேண்டும். இல்லையெனில், அவை 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பையும் இழக்க வேண்டி இருக்கும். அவை வேறு எந்த நாட்டையும் தேடிச் செல்லலாம். அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த கரன்சியும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.அப்படி முயற்சிக்கும் எந்த நாடும் வரிகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை, பிரிக்ஸ் நாடுகளுக்கு நேரடியாக விடப்பட்டுள்ள மிரட்டல் என்று கருதப்படுகிறது. இதே போன்றதொரு அறிக்கையை பதவி ஏற்பதற்கு சில வாரங்களுக்கு முன்பும் அவர் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *