செய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி: பங்கு சந்தைகளும் சரிவு

மும்பை, செப்.23–

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் குறைந்து 81.18 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதேபோல் பங்குச் சந்தைகளும் இன்று மூன்றாவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை 75 அடிப்படை விகிதாசார புள்ளிகள் (0.75 சதவீதம்) உயர்த்தி 3 முதல் 3.25 சதவீதமாக்கியது. அந்த வங்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயர்த்தியது.

இதுவும், உக்ரைன் விவகாரம் தொடர்பாக சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நியச் செலாவணி வர்த்தகம் நேற்று மிக மந்தமாக நடைபெற்றது.

அதன் விளைவாக, அன்று நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93 காசு சரிந்து 80.89 என்ற அளவில் சரிந்தது.

மேலும், வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்தன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி வா்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலையில் 80.27-ல் தொடங்கியது. இடைப்பட்ட நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்ச வீழ்ச்சியாக அது 80.95 வரை கீழிறங்கியது.

இறுதியில், ரூபாய் மதிப்பு புதன்கிழமை இருந்த 79.96-ஐ விட 93 காசு குறைந்து 80.89-இல் நிறைவடைந்தது.

இந்நிலையில், உலகச் சந்தைகளில் ஒட்டுமொத்தச் சரிவுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் இன்று மூன்றாவது நாளாக வீழ்ச்சியடைந்து, பலவீனமான நிலையில் வர்த்தகம் தொடங்கியது. இதில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 497 புள்ளிகள் குறைந்து 58,639 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 156 புள்ளிகள் குறைந்து 17,473 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.

இதில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் குறைந்து 81.18 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் இரண்டாவது நாளாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.