செய்திகள்

டான்செட் நுழைவு தேர்வு: 8–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 6

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை என்ஜீனியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான “டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தனியாக ஏயுசெட் (அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு) நுழைவுத் தேர்வை அறிவித்தது. இதன் காரணமாக, ஒரே படிப்புக்கு தமிழக மாணவர்கள் இரண்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்துமாறு தமிழக அரசு பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரையை ஏற்ற அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக துறைகள், உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். படிப்புகளுக்கு கடந்த ஆண்டுகளைப் போலவே “டான்செட்’ (தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு) நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்தது. இந்தத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எம்.சி.ஏ. படிப்புக்கு ஜூன் 22ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையிலும், எம்.பி.ஏ. படிப்புக்கு ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரையில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான “டான்செட்’ தேர்வு ஜூன் 23ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கு மே 8ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 25ம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வுக் கட்டணம் ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.சி., எஸ்சிஏ, எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு ரூ. 250 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட ஏயுசெட் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *