சிறுகதை

டாக்டர் | ராஜா செல்லமுத்து

கொரானா நாடு முழுவதும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகம் இப்போது பொய்யாகி விட்டது . ஒருவருக்கு ஒருவர் பார்க்க கூடாது, பேசக்கூடாது; தூரத்தில் தான் இருக்க வேண்டும் ; கை கொடுக்கக்கூடாது ; உறவினர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையில் இயங்கிக் கொண்டிருந்தது உலகம்.

சமூக இடைவெளி வெளியே போய் வந்தால் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். கூட்டமாக யாரும் நிற்க கூடாது, பேசக்கூடாது என்ற அதிக கட்டுப்பாடுகள் இருந்தது.

இந்த நாளில் மனிதர்களுக்கு உயிர் பயம் அப்பிக் கொண்டது. ஒவ்வொரு மனிதனும் தன்னை பாதுகாத்துக் கொள்வதே பெரும் கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நாளில் டாக்டர்கள் மட்டும் தான் தன் உயிரை பணயம் வைத்து மக்களை காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் டாக்டர்கள் இரவு பகலாக நோயாளிகளை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு போக முடியாது. மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு சென்றால் மருத்துவ மனையில் ஒட்டியே நோயின் அறிகுறி வீட்டில் உள்ளவர்களையும் தாக்கும் என்ற அச்சத்தில் மருத்துவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே செல்வதில்லை. தன் குடும்பம் பிள்ளைகள் உறவுகள் என்று அத்தனை பேர்களையும் மருத்துவர்கள் மறந்தே வாழக்கூடிய சூழல் இந்த நாளில் ஏற்பட்டது.

அதில் கனகராஜன் என்ற மருத்துவர் தற்போது கல்யாணம் ஆனவர். கல்யாணம் ஆன மூன்று மாதத்திற்குள் அவர் நோயாளிகளை பார்க்கும் கடமையில் ஈடுபட்டார். அவரை மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு செல்ல மருத்துவமனையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களும் அனுமதிக்கவில்லை. அவர் குடும்பத்தாருடன் பேச வேண்டுமென்றால் வீடியோ காலில் தான் பேசுவார்.

டாக்டர் கனகராஜனுக்கு சாப்பாடும் படுக்கையும் மருத்துவ மனையிலேயே கொடுக்கப்பட்டது. அவருடைய இன்ப இரவுகள் எல்லாம் ரணமாய் கழிந்தன . அவரை நம்பி நூற்றுக்கணக்கான நோயாளிகள் தஞ்சம் அடைந்தனர். அத்தனை நோயாளிகளையும் கனகராஜ் காப்பாற்றினார்.

சார் எங்க அப்பா, நீங்க இல்லைன்னா, இன்னைக்கு சார் ரொம்ப நன்றி சார் என்னுடைய கண்ணுக்கு நீங்க தெய்வம் மாதிரி தான் தெரியிரீங்க என்று ஒரு நோயாளி கூறினார்.

கனகராஜ் அதற்கு பதிலேதும் சொல்லாமல் புன்முறுவல் மட்டுமே பதிலாகத் தந்தார்.

இப்படியாய் பல நாட்களாக கனகராஜ் தன் குடும்பத்தை பார்க்கவே இல்லை. வீடியோ கான்பரன்சில் பேசுவது மட்டுமே. அப்போது அவர் தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டார்.

வேலையை ரெகுலரிலும் வாழ்க்கையை கரஸ்பாண்டன்ட் கோர்ஸிலும் நடத்தினார் கனகராஜ்.

நாட்கள் நகர்ந்தன. கனகராஜ் காப்பாற்றிய மக்களின் எண்ணிக்கை கூடியது … மக்கள் மத்தியில் கனகராஜன் புகழ் ஓங்கி நின்றது.

எவ்வளவோ கவனமாகவும் எவ்வளவு பத்திரமாகவும் இருந்த கனகராஜையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அவருக்கும் அந்த நோய் தொற்றிக் கொண்டது. மருத்துவமனையே அல்லல் பட்டது. நல்ல மனிதருக்கு இப்படி ஒரு நோயா? அவர் திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.

ஆனால் கனகராஜ் நீண்ட நாட்கள் அந்த மருத்துவமனையில் இருக்கவில்லை . அந்த கொடூர நோய் அவரை கொண்டு போனது .

இவ்வளவு மனிதர்களை காப்பாற்றிய அந்த மாமனிதனை அந்தக் கொடிய நோய் விட்டுவைக்கவில்லை.

கடைசியில் அந்த நோய்க்கு இரையானார்.

நோயின் காரணமாக இறந்ததால் அவரது உடலை உறவினர்களுக்கு கொடுக்கவில்லை. எட்டி நின்று பார்க்கவே அனுமதிக்கப்பட்டனர். மக்களை அந்த நோயில் இருந்து காப்பாற்றிய அந்த மகத்தான மனிதனை அடக்கம் செய்யக்கூட அந்த மனிதர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இல்லங்க இவரு கொரானா வந்து செத்து இருக்காரு. அதனால இவர இங்கே புதைச்சா எங்களுக்கும் நோய் வரும் அதனால அவரை இங்கே புதைக்க விடமாட்டோம் என்று அந்தப் பகுதி மக்கள் கனகராஜை புதைக்க விடாமல் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கனகராஜன் பூதவுடல் வீதியில் கிடத்தப்பட்டது .

அவரை அடக்கம் செய்யவிடாமல் அங்கிருந்த மனிதர்கள் கலவரம் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த வழியாகப் போன ஒரு பெரியவர் சொன்னார்.

டேய் அவரு மனுச உருவத்தில் வந்த கடவுளுடா. எவ்வளவு பேரை காப்பாற்றி இருப்பார். சாகப்போற என்னையும் காப்பாற்றினது அவர் தான். அவர் நல்ல மனுஷன். அவரை ஏண்டா புதைக்க விடாம இப்படிக் கலாட்டா பண்றீங்க. இது அடுக்குமா? என்று அந்த பெரியவர் சொல்ல, அந்த பெரியவரின் பேச்சை யாரும் யாரும் பொருட்படுத்தவில்லை.

அவர் உடலைப் புதைக்க விடாமலேயே ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். காவல்துறையினர் எவ்வளவோ சமாதானம் செய்தும் அந்த பகுதி மக்கள் அதை ஏற்க மறுத்தனர். கனகராஜ் கேட்பாரற்றுக் கிடந்தார்.

அவர் வேலை பார்த்த மருத்துவமனையில் இன்னும் நிறைய மனிதர்கள் கொரானா நோயின் தாக்கத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற சென்று கொண்டிருந்தார்கள். வேறு ஒரு மருத்துவர் அத்தனை பேருக்கும் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் .

நோயுற்ற மக்களுக்கு இன்னொரு மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.

மகத்தான மக்கள் சேவை செய்து பல உயிரை காப்பாற்றிய

டாக்டர் கனகராஜ் உடல் வீதியில் .

அதை அடக்கம் செய்யவிடாமல் மக்கள் கலவரம் செய்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *