செய்திகள்

டாக்டர் நிர்மலா சுந்தர்ராஜன்@ எம்பார் கண்ணன்

Makkal Kural Official

சென்னை, டிச 10–

பிரபல தொழிலதிபர் டெக்கான் என் கே மூர்த்தி தலைமையில் சென்னை நகரில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 45–வது ஆண்டு இசை – இயல் – நாடக விழா (2024–-25) வாணி மகாலில் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது.

விழாவை நெரூர் சாஸ்தா ஸ்ரீ ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்து அருளாசி கூறினார். அதோடு டாக்டர் நிர்மலா சுந்தர்ராஜன் (வாய்ப்பாட்டு), எம்பார் எஸ் கண்ணன் (வயலின்), பி ஹரிகுமார் (மிருதங்கம்), பிரியதர்ஷினி கோவிந்த்( பரத நாட்டியம்), எம் பூவராக மூர்த்தி (நாடகம்) ஐவரின் கடந்த கால அரிய சேவையை பாராட்டி,”வாணி கலா சுதாகரா” என்னும் விருதை வழங்கி ஆசி கூறினார்.

ஆரம்பத்தில் சபையின் தலைவர் டெக்கான் என்.கே.மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். அதில் சபா வெற்றிகரமாக 80வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருப்பதையும், 45வது ஆண்டு இசை – இயல் – நாடக விழா – 35வது பரதம் திருவிழா கோலாகலமாக துவங்கி இருப்பதையும், மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இருந்து இன்று வரை சபை ஆற்றி வந்திருக்கும் கலைச் சேவையையும், கௌரவிக்கப்பட்டு இருக்கும் கலைஞர்களையும் நினைவு கூர்ந்து, இளைய தலைமுறை கலைஞர்களையும் கௌரவித்து வரும் செயல்பாட்டையும் குறிப்பிட்டுப் பேசினார்.

பிரமீளா குருமூர்த்தி

பிரபல இசை ஆய்வறிஞர் பிரமீளா குருமூர்த்தி, விருது பெற்ற 5 கலைஞர்களின் திறமையையும், கடந்த காலங்களில் அவர்களின் அற்புதமான கலைச் சேவையையும் நினைவு கூர்ந்தார்.

பக்தி சிரத்தையோடு செயல்படும் குரு டாக்டர் நிர்மலா சுந்தரராஜன் – எண்ணற்ற செயல்முறை விளக்கக் கருத்தரங்குகளை நடத்தி இருப்பவர். எம்பார் கண்ணன் – கர்நாடக இசை, திரை இசை, மேற்கத்திய செவ்வியல் இசை மூன்றிலும் நிபுணத்துவம் பெற்றவர் ஹரிகுமார் – முழு நேரம் திருச்சி அகில இந்திய வானொலியில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டிருந்தாலும் இளம் கஞர்களை உருவாக்கி இருப்பவர். எண்ணற்ற ரசிகர்களை கொண்டிருப்பவர். பிரியதர்ஷிணி கோவிந்த் – தமிழ்நாடு, இந்தியா – வெளிநாடுகளில் பிரபலமானவர். நாட்டியத்தில் வசீகரித்திருப்பவர் பூரணம் விஸ்வநாதனுடைய பரிபூரண ஆசியில் நாடக மேடைக்கு அறிமுகம் ஆன பூவராக மூர்த்தி – கதை வசனம் இயக்கம் நடிப்பு நான்கிலும்… தன்னை உயர்த்திக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றிருப்பவர். பன்முகக் கலைஞர்’’ என்று பிரமிளா குருமூர்த்தி, ஐவர் பற்றியும் புகழ்ந்துரைத்தார். ஐவரிடம் தனக்கு மிகுந்த மரியாதை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் ரசிகை என்பதையும் பெருமிதத்தோடு கூறினார்.

வங்கி அதிகாரிகள்

இசை விழாவிற்கு அனுசரணையாக உதவிக்கரம் நீட்டி இருக்கும் வி. அருண் (மகாராஷ்டிரா வங்கி மண்டல மேலாளர்), சந்திரப் பிரகாஷ் (இந்தியன் வங்கி துணை பொது மேலாளர்), ராஜேஷ்குமார் வர்மா (கனரா வங்கி துணை பொது மேலாளர்), ஏ. சரவணகுமார் (பரோடா வங்கி மண்டலத் தலைமை- பொது மேலாளர்) ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் வளர்ச்சியையும் இசை மற்றும் நுண்கலைகளுக்கு ஆற்றி வரும் அருண் பணிகளையும் பெருமிதத்தோடு கூறி வாழ்த்தினார்கள். எதிர்காலத்திலும் தங்களுடைய வங்கியின் ஆதரவு தொடரும் என்று உறுதி கூறினார்கள்.

விருது பெற்றவர்கள் சார்பில் எம்பார் கண்ணன் ஏற்பரையாற்றினார். முடிவில் சேஷாத்திரி (கௌரவ பொருளாளர்) நன்றி கூறினார். நிர்வாகிகள் சந்திரசேகர் (துணைத் தலைவர்), டி.கே.ரகுநாதன், ஆர். சீனிவாசன் (கௌரவ செயலாளர்கள்) உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். கூல் ஈவென்ட்ஸ் குமார்- தலைமையிலான இளைஞர் படை விழா வெற்றிக்கு துணை நின்றார்கள்.

பினேஷ் மகாதேவனின்

‘ருத்ரதசகம்’

விருது விழா முடிவில் வாணி கலா நிபுணா – குரு பினேஷ் மகாதேவன் குழுவினரின் “ருத்ரதசகம்” நாட்டிய நாடகம் நடந்தது. ஒன்றானவன்… என்ற வரிகளில் துவங்கி பற்றானவன் – பத்தானவன்…. பாடலோடு முடிவடையும் நாட்டிய நாடகத்தில் சிவனுடைய 10 நிலைகளையும் படம் பிடித்து காட்டினார் பினேஷ் மகாதேவன்.

இரண்டானவன் என்ற நிலையில் அர்த்தநாரீஸ்வரரும், ஆறானவன் என்ற நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரையும், ஏழாம் நிலையில் ராவணேஸ்வரனையும், பத்தாம் நிலையில் சிவசங்கரனையும் கண்ணெதிரில் காட்டி, பினேஷ் மகாதேவன் ஏகோபித்த பாராட்டுதலை பெற்றார். அவருடன் இணைந்து ஆடிய உமா மகேஸ்வரி (சிவன்), மோனிஷா (பார்வதி) உள்ளிட்ட 26 நடன கலைஞர்களும் பம்பரமாய் சுழன்று பாராட்டு பெற்றது- அவர்களின் அதீத பயிற்சிக்கும், ஆசானின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. (இசை : ரங்கநாயகி ஜெயராமன், பாடல்கள்: சித்ரா நாராயணன்)

30 ஆண்டுகளுக்குப் பிறகு…

சந்திர பிரகாஷ் பேசுகையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு வாணி மஹால் அரங்கிற்கு நான் வருவது இது முதல் தடவை. அப்போது இந்தியன் வங்கியின் குமாஸ்தாவாக (கிளார்க்) நான் இருந்தேன். அப்போது அதிகாரியாக இருந்தவர் கண்ணன், மோர்சிங் கலைஞர். அவரோடு நிகழ்ச்சிக்கு வருவேன். இப்போது இதே மேடையில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த கவுரவம் இறைவன் கொடுத்த வரம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

சந்திரமோகனுக்கு

சுவாமிகள் பாராட்டு

நிகழ்ச்சியை அழகு தமிழில், இலக்கிய நயத்தில், எதுகை மோனையோடு சுவைபட தொகுத்து வழங்கினார் நாடக ஆசிரியர் கலைமாமணி சந்திரமோகன். அவரது உச்சரிப்பையும், அழகு தமிழையும் சுவாமிகள் மனம் திறந்து பாராட்டினார். ஆனந்தமான ஒரு சுகானுபவம் என்று அவருக்கு வாழ்த்தி அருளாசி கூறினார்.

––––––––––––––––––

பாக்ஸ்

–––––––––––––––––

‘‘இசை உபாசனை மூலம்

பரமபதம் அடையலாம்…!’’

இசை விழாவில் நெரூர் சாஸ்தா ஸ்ரீ ஸ்ரீவித்யா சங்கர சுவாமிகளின் ஆசி உரை, அனைவரையும் பேச வைத்தது. மடை திறந்த வெள்ளம் போல்… என்னமாய் ஒரு உரை என்று பிரமிக்க வைத்தது.

சமஸ்கிருத ஸ்லோகத்துடன் பேச்சை துவக்கியவர் வால்மீகி, ஆதிசங்கரர், சங்கீத மும்மூர்த்திகள் – தியாகராஜர்- சியாமா சாஸ்திரிகள்-, முத்துசாமி தீக்ஷிதர் மற்றும் அருணகிரிநாதர், தமிழ் தாத்தா உ வே சாமிநாதையர்… ஆகியோரின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசியவர், பார்வையாளர்களை (ஏன் மேடையில் விருது பெற்ற கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட அனைவரையும்…) கைகட்டி மெய் பொத்தி, வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தார், நெகிழ வைத்தார்.

ஸ்ரீ தியாக பிரம்ம கான சபை ஓர் உன்னதமான சபை. அதன் கடந்த கால செயல்பாடுகள்… கலைஞர்களுக்கு ஓர் உத்வேகம் என்று குறிப்பிட்டு ஆசி கூறினார்.

நாம் ஒவ்வொருவருக்கும் குலதெய்வ ஆராதனை முக்கியம். அதுபோலவே ஊர் விசுவாசம் முக்கியம் என்று அறிவுறுத்தியவர், யோகிகள் அடையும் பரமபத ஸ்தானத்தை அடைய வைப்பது இசை. நுண் கலைகளின் உபாசனை – இசை மூலம் அனைவரும் இலகுவாக பகவானை அடைய முடியும் என்று புராதன அனுபவங்களை மேற்கோள் காட்டிப் பேசினார்.

பரம பதத்தை –- மோட்சத்தை அடைவதற்கு சங்கீத மார்க்கம் மாதிரி வேறு எதுவுமே இல்லை உறுதிபடக் கூறியவர், குழந்தைகளையும் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சங்கீத மும்மூர்த்திகள், சுவாதி திருநாள் உள்ளிட்ட மகான்கள் எல்லாம் பகவானுக்கு அர்ப்பணித்த சாகித்தியங்கள் இன்றளவும் அழியாமல் இருப்பதற்கு… விருது பெற்றிருக்கும் கலைஞர்கள், கௌரவித்து கலை வளர்க்கும் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா உள்ளிட்ட சபாக்கள் அடி ப்படை காரணம், ஆதார சுருதி என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, கலைகள் மலர வேண்டும், கலைஞர்கள் வளர வேண்டும் என்று ஆசி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *