சென்னை, மே 8–
புகழ்பெற்ற எலும்பியல் நிபுணரும், அண்ணா நகரில் உள்ள சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியன் நேற்று (7ந் தேதி) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.
1931 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தவர் டாக்டர். சௌந்தரபாண்டியன். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனது எம்பிபிஎஸ் பட்டத்தையும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) எம்எஸ் பொது அறுவைசிகிச்சை மற்றும் எம்எஸ் எலும்பியல் பட்டங்களையும் பெற்றார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள நஃபீல்ட் எலும்பியல் மையத்தில் காமன்வெல்த் உதவித்தொகை திட்டத்தில் பயிற்சி பெற்றார்.
டாக்டர். சௌந்தரபாண்டியன், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் பேராசிரியராகப் பணியாற்றி, பின்னர் துறையின் தலைவராகவும் இருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தார். 1982 ஆம் ஆண்டு அவர் அண்ணா நகரில் சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையை நிறுவினார்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் (ஆர்.ஜி.ஜி.ஜி.ஹெச்) எலும்பியல் பிரிவை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார். தனியார் மருத்துவமனைகள் அவ்வளவாக இல்லாத 1970 ஆண்டுகளிலும் 1980 ஆண்டுகளிலும் எலும்பியல் நோயாளிகள் பெரும்பாலும் அரசு பொது மருத்துவமனைக்கே வந்தனர்.
“சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட தங்கத் தரமான மருத்துவமனைகளில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஒன்றாகும்” என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
2020 ஆம் ஆண்டு வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். ‘‘கோவிட்-19’’ (கொரோனா) தொற்றுநோய் சமயத்தில்தான் அவர் நோயாளிகளைப் பார்ப்பதை நிறுத்தினார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஸ்டான்லியில் எக்ஸ்ரே பிரிவை
உருவாக்கியவர்… அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் எலும்பியல் நோயாளிகளின் சிகிச்சைக்காக எக்ஸ்ரே பிரிவை உருவாக்கியவர். அதைத் திறம்பட நிர்வகித்தவர். நோய் கடுமையாகப் பாதித்திருக்கும் சிக்கலான நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சை அளித்து பொதுமக்களிடையே தனிப்பெரும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றவர் டாக்டர். செளந்தரபாண்டியன்.
சீர்காழி சிவ சிதம்பரத்தின்
ஆசிரியர்
கர்நாடக இசை மேதை மற்றும் மருத்துவருமான டாக்டர். சீர்காழி சிவ சிதம்பரம், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். சௌந்தரபாண்டியனின் மாணவர் ஆவார்.
அவர் தனது இரங்கல் செய்தியில், ‘‘டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியனின் மறைவு எலும்பியல் துறைக்கு ஒரு பெரிய இழப்பு’’ என்று கூறியுள்ளார்.
“டாக்டர். செளந்தரபாண்டியனின் மகன்கள் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எனது சகத் தோழர்கள், மாணவர்கள். அவர் ஒரு சிறந்த குரு, சிறந்த மருத்துவர். அவர் மறைவு ஏற்படுத்தியிருக்கும் துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னோடி எலும்பியல் நிபுணர், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் மற்றும் இரக்கமுள்ள குணப்படுத்துபவர் என்ற டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியனின் பாரம்பரியம், அவரது குடும்பத்தினராலும், சக ஊழியர்களாலும், மாணவர்களாலும், அவர் சிகிச்சை அளித்த எண்ணற்ற நோயாளிகளாலும் என்றென்றும் போற்றப்படும்.
2 மகன்களும்
எலும்பியல் நிபுணர்கள்
டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியனுக்கு மனைவி கோதை, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன்கள் சிவமுருகன், ரவிசுப்ரமணியம் இருவரும் எலும்பியல் நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.