செய்திகள்

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்கினால் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை

சட்ட விரோத பொருட்களை அனுப்பும் கூரியர் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும்

சென்னை, செப். 8–

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் நடந்த போதை ஒழிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மருந்து கடைகளுக்கு காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

“போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் துவங்கி வைத்தார். அதனையடுத்து சென்னை நகரில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து அதனை கடத்தும் ஆசாமிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கஞ்சா, குட்காவை தவிர மற்ற அலோபதி மருந்துப் பொருட்களையும் போதைக்கடத்தல் ஆசாமிகள் வாங்கி விற்று வருகின்றனர். இதனால் அவற்றையும் கண்காணித்து தடை செய்யும் நோக்கில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஆபரேஷன் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்கு தரப்படும் மயக்கம் தரக்கூடிய மருந்து, மாத்திரைகள் மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை பெருநகர காவல் சார்பில், மருந்துக்கடை உரிமையாளர்கள், மருந்து விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர், சர்வதேச கொரியர் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கலந்தாய்வில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் கமிஷனர்கள் அன்பு (வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), வடக்கு மண்டல இணைக்கமிஷனர் ரம்யபாரதி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு, கஞ்சா, போதை பொருட்கள், குட்கா புகையிலை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகள், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

கட்டுப்பாடுகள்

இக்கலந்தாய்வில் மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

* அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளின்போது, நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மயக்கம் தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு (Prescription) இல்லாமல் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது.

* மருந்து சீட்டுகளில் மருந்து வாங்கிய பின்பு Delivered என்ற சீல் அச்சிடவேண்டும்.

* போதை தரும் மருந்து மாத்திரைகளை யாருக்கும் மொத்தமாக வழங்கக்கூடாது.

* போதை தரும் மருந்து மற்றும் மாத்திரைகள் கேட்டு தொந்தரவு செய்து மிரட்டும் நபர்கள் பற்றி காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மருத்துவரின் பரிந்துரையில்லாமல் போதைக்கு பயன்படுத்தும் மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தங்களது ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி, இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

காவல்துறையின் அறிவுரைகள் மீறி செயல்படுவதோ அல்லது போதை பொருட்கள் மற்றும் சட்ட விரோத பொருட்களை அனுப்புவதற்கு துணை புரியும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்தாய்வில், சென்னையிலுள்ள முக்கிய மருந்துக்கடைகளின் உரிமையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச கூரியர் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இக்கலந்தாய்வில் கலந்து கொண்ட மருந்துக்கடை உரிமையாளர்கள், கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள், காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என உறுதி அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *