செய்திகள் நாடும் நடப்பும்

டாக்டர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்க வேண்டும்:

Makkal Kural Official

சென்னை, மே 15-–

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் டாக்டர்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்குமாறு கல்லூரி டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்ற மானியக்கோரிக்கையில் நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும்விதமாக, சென்னை தியாகராயநகர், நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையத்தில் தடுப்பூசி சேவையினை நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து தடுப்பூசி சேவைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தடுப்பூசி தகவல் கையேட்டினை வெளியிட்டார்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–-

தமிழ்நாட்டில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. கூடுதலாக 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடையும். அதன்பின், சென்னையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக 208 நகர்புற நலவாழ்வு மையங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சத்து 58 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், 8 லட்சத்து 76 ஆயிரம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 99 சதவீதம் தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்துவதை நிறைவேற்றி, மற்ற மாநிலங்களை காட்டிலும் ஒரு மகத்தான சாதனையை படைத்து வருகிறது. நியுமோகோக்கல் தடுப்பூசியை கடந்த 2021–-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மொத்தம் 9 லட்சத்து 27 ஆயிரத்து 794 குழந்தைகள் பயன்பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமே தேசிய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக பெரிய பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு என்.எம்.சி. நிர்வாகம் ஆண்டு தோறும் நோட்டீஸ் வழங்கி வருகிறது. அவர்கள் வழங்கும் நோட்டீஸ்களுக்கு பதில் அனுப்புவோம். பிறகு அது சரி செய்யப்பட்டு விடும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 35 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவக் குழுமம் சில பற்றாக்குறைகளுக்கான விளக்கத்தினை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. 26 கல்லூரிகள் உரிய பதில் அனுப்பியுள்ளன. 3 கல்லூரி இன்று (நேற்று) பதிலை அனுப்ப உள்ளன. மீதமுள்ள கல்லூரிகள் வரும் வெள்ளிக்கிழமை உரிய விளக்கத்தினை அனுப்ப உள்ளன.

பொதுவாக மேற்கோள் காட்டப்பட்டுள்ள குறைபாடுகளான, டாக்டர்கள் பயோமெட்ரிக் வருகை பதிவு போதாமை மற்றும் உரிய ஆசிரிய பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும் பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்குமாறு கல்லூரி டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, சில மாதங்களுக்கு முன்பு 2,246 டாக்டர்கள் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 415 காலிப்பணியிடங்கள் இருந்தது. இதில் கடந்த வாரம் 318 காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 87 காலிப்பணியிடங்கள் நேற்று முன்தினம் மாலை நிரப்பப்பட்டது. எனவே, அரசு மருத்துவக்கல்லூரிகளில் டாக்டர்கள் காலிப்பணியிடம் இல்லை. இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அளவிலான கால பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *