செய்திகள்

டவ்-தே புயலில் 273 பேருடன் மும்பை கடலில் மூழ்கிய ஓஎன்ஜிசி கப்பல்

127 பேர் மாயம்

மும்பை, மே 18–

டவ்–தே புயல் காரணமாக மும்பை கடலில் அடித்து செல்லப்பட்ட ஓஎன்ஜிசி கப்பலில் இருந்த 127 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அரபிக்கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய டவ்–தே நேற்று இரவு குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள கடலோர மாவட்டங்கள், மும்பை ஆகிய பகுதிகள் பெரிய அளவில் சேதங்களை சந்தித்துள்ளன.

இதில் நேற்று மும்பை கடலில் நிறுத்தப்பட்டு இருந்த ஓஎன்ஜிசி கப்பல் கடலில் அடித்து செல்லப்பட்டது. 150 கிமீ வேகத்தில் வீசிய புயல் காற்று காரணமாக இந்த கப்பல் நேற்று கடலில் அடித்து செல்லப்பட்டு, பின் நீரில் மூழ்கியது.

கடலில் கட்டுமானம், எண்ணெய் எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும். ஓஎன்ஜிசி சார்பாக மும்பையில் பார்ஜ் 305 என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பார்ஜ் 305 கப்பல் நேற்று டவ்–தே புயல் வீசிய பாதையில் நிறுத்தப்பட்டு இருந்த காரணத்தால் வேகமாக வீசிய காற்றில் கடலில் அடித்து செல்லப்பட்டது.

புயல் காரணமாக இதன் நங்கூரம் நீங்கிய நிலையில், கடலில் கட்டுப்பாடு இல்லாமல் இந்த பார்ஜ் 305 கப்பல் மிதந்து சென்றது. பாம்பே ஹை கடல் பகுதியில் இருந்து 175 கிமீ தூரம் சென்ற பின் இந்த கப்பல் நீரில் மூழ்கியது. இந்த கப்பலில் மொத்தம் 273 பேர் இருந்துள்ளனர். இதில் 145 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள 127 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய கடற்படை, தற்போது பி-8ஐ விமானம் மூலம் மீட்பு பணிகளை செய்து வருகிறது. அதேபோல் கடற்படை மூலம் இங்கு பல இடங்களில் சிறிய சிறிய மீட்பு படகுகள் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நேற்று இரவு முழுக்க மீட்பு பணிகள் நடந்த நிலையில் இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *